என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரம்-திருவள்ளூரில் தி.மு.க.வினர் ரெயில் மறியல்
காஞ்சீபுரம்:
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்தில் திருமால்பூர் - சென்னை கடற்கரை மின்சார ரெயிலை முற்றுகையிட்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், சன்பிராண்ட் ஆறுமுகம், வி.எஸ்.ராமகிருஷ்ணன், பி.எம்.குமார். சிறுவேடல் செல்வம், வி.ராஜேந்திரன், சோபன்குமார், உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் வாலாஜாபாத் ரெயில் நிலையத்தில் உத்திரமேருர் எம்.எல்.ஏ. சுந்தர் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சேகர், பாண்டியன், குமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, நகர செயலாளர்கள், நரேந்திரன், சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்மணி, மூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் ஆலடி சா.மு.நாசர் தலைமையில் எம்.எல்.ஏ., வி.ஜி ராஜேந்திரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் அரக்கோணம் புறநகர் ரெயிலை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தில் காலை 6 மணி முதல் அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர்-சென்னை நோக்கி எந்த மின்சார ரெயிலும் இயக்கப்படவில்லை.
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் திருவள்ளூர் வடக்குமாவட்ட செயலாளர் வேலு தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.






