என் மலர்

  செய்திகள்

  வேலூர்-திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்
  X

  வேலூர்-திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூர்-திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  வேலூர்:

  ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்கக்கோரியும் வேலூர் அண்ணாசாலையில் அண்ணா கலையரங்கம் அருகே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள், வேலூர் மாவட்ட எருது விடும் விழா பாதுகாப்பு சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

  போலீஸ் சூப்பிரண்டு பகலவன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் உமாசங்கர், பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்து இரவிலும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக இளைஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

  வேலூர் சாய்நாதபுரத்தில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இன்று காலை மனித சங்கிலி போராட்டம் செய்தனர். ஆரணி மெயின் ரோட்டில் சென்ற பொதுமக்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

  வேலூர் கோட்டை முன்பு கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.

  மேல்விஷாரம் அப்துல்ஹக்கிம் கல்லூரி, குளோபல் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அதேபோல், குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  அணைக்கட்டு, ஒடுக்கத்தூர், ஜோலார்பேட்டை உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு திரண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே இளைஞர்கள், மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

  போளூர் காந்தி பூங்கா அருகில் இளைஞர்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஆர்பாட்டத்தில் ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்திட வலியுறுத்தியும். இந்திய நாட்டிலிருந்து பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

  ஆரணி அண்ணாசிலை அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி, மாணவ-மாணவிகள் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி போராட்டம் செய்தனர்.

  பின்னர் ஆரணி பஜார் வீதி, மார்க்கெட் வீதி, காந்திரோடு வழியாக ஊர்வலமாக சென்றனர். ஆரணி கோட்டை மைதானத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது. அங்கு மாணவர்கள் இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஏ.சி.எஸ். கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  Next Story
  ×