search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆந்திர விவசாயிகள் வாக்குவாதம்
    X

    தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆந்திர விவசாயிகள் வாக்குவாதம்

    கிருஷ்ணா கால்வாய் மதகுகளை மூட எதிர்ப்பு தெரிவித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆந்திர விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    ஊத்துக்கோட்டை:

    பருவ மழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதையடுத்து கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 9-ந் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது.

    கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திர முதல்-மந்திரியிடமும் கோரிக்கை விடுத்தார்.

    இதைத் தொடர்ந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப் படியாக உயர்த்தப்பட்டது. தற்போது 1700 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீர் நேற்று முன்தினம் இரவு ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வந்து சேரவில்லை. ‘ஜீரோ’ பாயிண்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    கிருஷ்ணா கால்வாய் ஓரங்களில் உள்ள 800-க்கும் மேற்பட்ட மதகுகளை ஆந்திர விவசாயிகள் திறந்து தங்களது விளை நிலங்களுக்கு பாய்ச்சி வருகிறார்கள். இதன் காரணமாக கிருஷ்ணா கால்வாய் தண்ணீர் ஓட்டம் குறைந்து தேங்கி நிற்கிறது.

    இதையடுத்து நேற்று காலை தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர மாநிலம் சென்று திறக்கப்பட்ட மதகுகளை மூடும்படி அங்குள்ள விவசாயிகளிடம் தெரிவித்தனர்.

    ஆனால் அதனை அவர்கள் ஏற்க மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழக அதிகாரிகள் திரும்பி வந்துவிட்டனர். இன்று காலை ஆந்திர போலீசாருடன் இணைந்து மதகுகளை மூட இருப்பதாக தெரிகிறது.

    மதகுகள் மூடப்பட்டால் தான் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் விரைந்து வந்துசேரும். இல்லையெனில் தண்ணீர் வர மேலும் தாமதம் ஆகும்.

    இதற்கு முன்பு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்ட போதும் ஆந்திர விவசாயிகள் மதகுகளை திறந்து தங்கள் நிலங்களுக்கு தண்ணீரை பாய்ச்சினர். பின்னர் ஆந்திர அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுத்து மதகுகளை மூடியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×