search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போர்க்கொடி: தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் எழுச்சி
    X

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போர்க்கொடி: தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் எழுச்சி

    ஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் இடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது.
    தஞ்சாவூர்:

    ஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை எப்போதும் இல்லாத வகையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போர் கோலம் பூண்டுள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் இடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் மாணவர்கள் அயராமல் அமர்ந்து போராடுகிறார்கள்.

    தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் நேற்று இரவு 9.30 மணி வரை இளைஞர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலைந்து சென்றனர். இன்று 2-வது நாளாக அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் உச்சி பிள்ளையார் கோவிலில் இருந்து நாகேஸ்வரன் வடக்கு வீதி, கீழ வீதி சந்திப்பு வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இளைஞர்கள் பேரணி நடத்தினர். மன்னார்குடி தேரடியில் தொடங்கிய பேரணி, பந்தலடி வழியாக நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியினர் மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட 29 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சேலத்திலும் பல அமைப்பினர், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.



    நேற்று மாலை சேலம் 5 ரோட்டில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் மறியலில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் ஒன்றாக சேர்ந்தனர்.

    இரவிலும் போராட்டம் தொடர்ந்தது. மைதானத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்றும் 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

    திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நேற்று மாலையில் மாணவர்கள் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் சிந்தாமணி அண்ணாசிலை அருகே திரண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பாக கோ‌ஷங்களை எழுப்பினர்.

    ஈரோடு காளைமாட்டு சிலை அருகே இளைஞர்கள் இளம்பெண்கள் என அனைத்து தரப்பட்ட பொது மக்களும் திரண்டனர்.

    அவர்கள் காளைமாட்டு சிலை அருகே வந்து கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×