search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா வழியில் மக்கள் பணியில் ஈடுபடுவேன்: தீபா
    X

    எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா வழியில் மக்கள் பணியில் ஈடுபடுவேன்: தீபா

    ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதியன்று அரசியலின் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி அறிவிப்பேன். எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா வழியில் மக்கள் பணியில் ஈடுபடுவேன் என்று தீபா பேட்டியின்போது கூறினார்.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா இன்று முதல் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இன்று காலை அவர் முறைப்படி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

    அதற்கு ஆசி பெறும் வகையில் இன்று காலை அவர் தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லம், அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் ஆகிய இடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



    ஜெயலலிதா நினைவிடத்திலும் அவர் மலர் மாலை வைத்து வழிபட்டார். பிறகு தியாகராயநகர் வீட்டுக்கு தீபா திரும்பினார்.

    தீபா வீடு அருகில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மேளதாளம் முழங்க தீபாவை வாழ்த்தி கோ‌ஷமிட்டப்படி இருந்தனர்.

    இதற்கிடையே தீபா வீட்டு போர்டிகோவில் அவர் பேட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிருபர்கள் ஒவ்வொருவரும் அடையாள அட்டையை காண்பித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    11.30 மணிக்கு தீபா பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    இத்தனை நாட்களாக எனக்கு ஆதரவளித்து என் வீடு முன்பு திரண்ட மக்களுக்கும், அ.தி.மு.க.வின் ரத்தத்தின் ரத்தங்களான உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அகர முதல் எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்ற வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப தமிழ்த்தாயை வணங்கி என் முதல் உரையை இங்கு படிக்கிறேன்.

    பகுத்தறிவு பகலவன் பெரியார், அறிஞர் அண்ணாவை கண்டெடுத்தார். பேரறிஞர் அண்ணா ஆசியோடு அரசியல் களம் கண்டார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

    அவருக்குப் பிறகு மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற உயரிய குறிக்கோளுடன் அம்மா அவர்கள் அ.தி.மு.க.வை வழி நடத்தினார். மக்கள் மனதில் மாபெரும் தலைவராக அவர் திகழ்ந்தார்.

    1972-ம் ஆண்டு அ.தி.மு.க. தொடங்கிய எம்.ஜி.ஆர். தொடர்ந்து கட்சியை வழி நடத்தியதுடன் ஏழை மக்களுக்கான ஆட்சியை நடத்தினார். அவருக்குப் பிறகு அம்மா அ.தி.மு.க.வையும் தொண்டர்களையும் வழி நடத்தி பெண்கள் மற்றும் ஏழைகளுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்தார்.

    உடல் நலக்குறைவு காரணமாக 2½ மாதங்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி அனைவரையும் மீளாத்துயரில் ஆழ்த்தியது. அதில் இருந்து நாம் மீண்டு வருவதற்குள் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன.

    இதுபோன்ற ஒரு சூழலில் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்களும் அ.தி.மு.க. தொண்டர்களும் என்னைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எனக்கென்று தனி குடும்பம், தனி வாழ்க்கை பொறுப்புகளும் உள்ளன.

    என்னை நம்பி அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்த மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி. அவர்கள் வேண்டுகோளை ஏற்று மக்கள் பணியை தொடர்ந்து செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

    என் தாய் வீடான தமிழ்நாடும், தமிழ்மொழியும் இனி என் இரண்டு கண்களாக இருக்கும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய வழியில் ஏழை-எளிய மக்கள் நலன் காக்க இனி என் பயணத்தை தொடங்க உள்ளேன்.

    இந்த பயணம் தூய்மையானதாக இருக்கும். இன்று முதல் புதிய பயணத்தை நான் தொடங்கி விட்டேன்.

    நான் அரசியலுக்கு வருவேனா? வர மாட்டேனா? ஓடி ஒளிந்து விடுவேனா? என்ற பேச்சுக்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாடப்படும் இந்த நாளில் நான் தொடங்கி இருக்கும் இந்த பயணம் புதிய அத்தியாயம் படைக்கும்.

    அம்மா அவர்கள் காட்டிய வழியில் தமிழகத்தையும், தமிழக மக்களையும் வழி நடத்துவேன். அம்மா அவர்களின் லட்சியம், இலக்குகளை மக்களோடு நின்று செயல்படுத்துவேன். அவரது கனவை நனவாக்குவேன்.

    பெண்கள் மீது அளவு கடந்து அன்பு வைத்திருந்த ஜெயலலிதா அவர்களுக்காகவே வாழ்ந்தவர். எனவே வரும் காலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மக்கள் ஆட்சியை மலரச் செய்ய வேண்டும்.

    உறுதியான லட்சியத்துடன் நடைபோடுவோம். நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்.

    ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதியன்று அரசியலின் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி அறிவிப்பேன். அன்று முதல் எனது அரசியல் பயணத்தை வேகமாக தொடங்குவேன்.

    பிப்ரவரி 24-ந்தேதி மிக முக்கிய முடிவுகளை அறிவிப்பேன். இனி மக்கள் பணிக்காக என் காலத்தை செலவிட உள்ளேன்.

    எனது அரசியல் ஆசையை சில ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படுத்தி இருந்தேன். அதற்கான காலம் இப்போது தான் கனிந்துள்ளது.

    இனி தமிழகம் முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளேன். அப்போது தற்போதைய அரசியல் நிகழ்வுகள் பற்றி விரிவாக கருத்துகள் கேட்க உள்ளேன்.

    இந்த நேரத்தில் எனக்கு ஆறுதல் அளித்து ஊக்கம் கொடுத்த மக்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு தீபா கூறினார்.

    Next Story
    ×