search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநாவுக்கரசர் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
    X

    திருநாவுக்கரசர் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

    காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் எம்.ஜி.ஆர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மறைந்த, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இந்த மாநிலத்துக்கு மட்டுமல்ல தேசிய தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர் என்று மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கூறி உள்ளார். எம்.ஜி.ஆர். பாரத ரத்னா விருது பெற்றவர். தமிழக மக்களின் நெஞ்சம் நிறைந்தவர். அதனால் இந்த விழாவை நடத்திருக்கிறோம்.

    1984-ம் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்த போது அ.தி.மு.க.வும் காங்கிரசும் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். வெளிநாடு செல்ல தனி விமானம் ஏற்பாடு கொடுத்தவர் ராஜீவ்காந்திதான். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பேச முடியாத நிலையில் இருந்தார். அதனால் யாரை முதல்-அமைச்சர் ஆக்குவது என்ற கேள்வி எழுந்தது. ஆனால் எம்.ஜி.ஆர்.தான் முதல்-அமைச்சராக இருக்க வேண்டும் என்று ராஜீவ்காந்தி கூறினார்.

    1991-ல் காங்கிரசுடன் ஜெயலலிதா கூட்டணி வைத்தார். உலகம் போற்றும் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இறந்த பிறகு வழிபடுவது இயல்பு.

    அந்த வகையில்தான் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை நாங்கள் கொண்டாடுகிறோம். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டவன் நான் என்பது காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் காந்திக்கும் தெரியும்.

    காங்கிரசை சசிகலா கணவர் நடராஜன் ஜீரோ என்று கூறி உள்ளார். காங்கிரஸ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தது. அதனால் காங்கிரஸ் அழிந்துவிட்டது என்று கூறுவது தவறு. காங்கிரஸ் அழியவில்லை. அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்தான். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் காங்கிரசுடன் கூட்டணி வைத்து இருக்கிறார்கள். அதை மறந்துவிட கூடாது.

    ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு. அடுத்த ஆண்டாவது நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட இளைஞர்கள், பொதுமக்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மூத்த தலைவர் குமரி அனந்தன், எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாநில தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, கலை பிரிவு மாநில துணை தலைவர் ஐஸ்அவுஸ் தியாகு, முன்னாள் கவுன்சிலர் தமிழ்செல்வன், இரா.அய்யப்பன், அசன் ஆரூண், வீரபாண்டியன், வேளச்சேரி செல்வம், ராஜ்குமார், துல் கருணை இமயகக்கன், ஆனஸ்ட்ராஜ், சுனில் குமார், கார்த்தி அருணகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அம்பேத்கர் சட்டகல்லூரி, மாநில கல்லூரி உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர்கள் ஆனஸ்ட்ராஜ், சுனில்குமார் தலைமையில் காங்கிரசில் இணைந்தனர்.
    Next Story
    ×