என் மலர்
செய்திகள்

90 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: கோவை மாநகருக்கு சிறுவாணி குடிநீர் சப்ளை நிறுத்தம்
கோவை:
கோவை மாநகருக்கு சிறுவாணி, பில்லூர் அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பருவமழை பொய்த்ததால் சிறுவாணி அணையில் குறைந்தபட்ச நீர்மட்டத்திற்கு கீழ் தண்ணீர் சென்று விட்டதால் அதில் இருந்து தண்ணீர் எடுப்பது கடந்த 7-ந்தேதியோடு நிறுத்தப்பட்டது.
அணையில் இருந்து குடிநீர் எடுக்க உதவும் 4 வால்வுகள் உள்ள பகுதியில் தற்போது தண்ணீர் இல்லாததால் வறண்டு உள்ளது. அணையில் நிரந்தர நீர் இருப்பு உள்ள பகுதிகளில் இருந்து தண்ணீர் எடுக்க உதவும் வால்வுகள் உள்ள பகுதியான நீர்புகு பகுதிக்கு கொண்டு வர வேண்டும் என்றால் பம்ப் செய்ததால் தான் முடியும். ஆனால் அந்த தண்ணீர் அந்த பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு தேவை.
எனவே மோட்டார் வைத்து பம்ப் செய்ய வேண்டும் என்றால் அதற்கு கேரள அரசு அனுமதி தேவை என்று கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர். இதனால் சிறுவாணியில் இருந்து நீர் எடுப்பது நிறுத்த வைக்கப்பட்டுள்ளது. சிறுவாணி அணை நிரம்பி இருக்கும்போது அதில் இருந்து கோவை மாநகராட்சிக்கு தினமும் 11 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து வந்தது.
ஆனால் அந்த தண்ணீர் முழுவதும் தடைப்பட்டுபோனதால் கோவை மாநகரில் சிறுவாணி குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. அதற்கு பதிலாக பில்லூர் அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை கொண்டு கோவை மாநகராட்சி சமாளித்து வருகிறது.
இதன் காரணமாக முன்பு கோவையில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் இருந்தது. தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறையும், சில பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சிறுவாணி அணையில் மோட்டார் பம்ப் வைத்து குடிநீர் எடுக்க வேண்டும் என்றால் பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து மணகடவு வழியாக கேரளாவுக்கு கூடுதலாக வினாடிக்கு 100 கனஅடி வீதம் மே மாதம் வரை தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கேரள அரசு நிபந்தனை விதித்துள்ளது. இது தமிழக அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே சிறுவாணி அணை நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் அப்போதை சிறுவாணியில் இருந்து கோவை மாநகருக்கு வரும் வழியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளூர் குடிநீர் ஆதாரத்தை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது.
தற்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் மாநகர பகுதிகளில் தண்ணீர் வராத இடங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதல்முறையாக சிறுவாணி குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு பிறகு முதல்முறையாக இந்தாண்டு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் கூறும்போது, தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால் மக்கள் தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க வேண்டும். மேலும் குடிநீர் குழாயில் கசிவு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக எங்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அதிகாரிகள் 24 மணிநேரமும் குடிநீர் பிரச்சினையை போக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள் என்றார்.
கோவை மாநகராட்சி குடிநீர் வழங்கல் அதிகாரி கூறியதாவது,
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.பி. நரசிம்மலு நாயுடு என்பவர் சிறுவாணி மலை பகுதியில் சென்று பார்வையிட்டு முத்திகுளம் பகுதியில் சிறுவாணி அணை கட்ட வேண்டும் என 1889-ம் ஆண்டு அரசுக்கு கடிதம் அனுப்பினார். அது கிடப்பில் போடப்பட்டது.
அதன் பின்னர் கோவை நகராட்சி தலைவராக இருந்த ரத்தினசபாபதி முதலியார் என்பவர் பேச்சுவார்த்தை நடத்தி 1925-ம் ஆண்டு அணை கட்டும் பணி தொடங்கியது. இதற்காக ரூ.41 லட்சம் செலவில் அணை கட்டப்பட்டு 1929-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அதன்பின்னர் கோவை மாநகருக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.
முன்பெல்லாம் ஏப்ரல், மே மாதங்களில் தான் அணையில் தண்ணீர் மட்டம் குறைந்து காணப்படும். அப்போது கூட கோவை மாநகருக்கு குடிநீர் சப்ளை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 90 வருடங்களில் இல்லாத அளவிற்கு தற்போது வறட்சி நிலவுவதால் கடந்த 7-ந்தேதி முதல் குடிநீர் சப்ளை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி இளநிலை பொறியாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது,
பில்லூர் அணையில் இருந்து கோவை மாநகர பகுதியில் உள்ள 23 வார்டுகளுக்கு பாரதி பார்க்கில் உள்ள தண்ணீர் தொட்டி மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அவை சாய்பாபா காலனி, ஆர்.எஸ். புரம், ராம்நகர், செல்வபுரம், சொக்கம்புதூர், கல்லாமேடு, தெலுங்குபாளையம், டவுன்ஹால் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 5 பகுதிகள் தற்போது இணைக்க முடியாத சூழ்நிலை உள்ளதால் லாரிகள் மூலமாக வீட்டுக்கு 5 குடங்கள் வீதம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
* * * சிறுவாணி அணை வற்றியதால் கோவை மாநகருக்கு குடிநீர் உறிஞ்சும் இடம் வறண்டு கிடக்கும் காட்சி.