search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக விடிய விடிய போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது
    X

    அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக விடிய விடிய போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது

    ஜல்லிக்கட்டுக்காக மதுரை அலங்காநல்லூரில் விடிய விடிய போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

    அலங்காநல்லுர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றதாகும். உச்சநீதிமன்ற தடையால் கடந்த 2 ஆண்டாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு எப்படியும் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்தனர். அதன்படி பொங்கல் அன்று அவனியாபுரத்திலும் மறுநாள் பாலமேட்டிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

    உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடி வாசலில் நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான பேர் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து வாடிவாசல் மற்றும் அலங்காநல்லூர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று காலை ஊர் பொதுமக்கள் கோவில் காளைகளை குளிப்பாட்டி மாலை அணிவித்து பூஜை செய்தனர். இந்த நிலையில் போலீசாரை ஏமாற்றி ஒரு வழியாக ஜல்லிக்கட்டு காளையை அவிழ்த்து விட்டனர். ஜல்லிக்கட்டு காளை துள்ளி ஓடியதை பார்த்து அங்கு இருந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். அவர்கள் அங்கு அமைக்கப்பட்டு இருந்த பேரிகாட்டை தாண்டி வாடிவாசல் நோக்கி செல்ல முயன்றனர். இதனைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் இளைஞர்கள் நாலாபுறமும் கலைந்து சென்றனர். போலீஸ் தடியடியில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் சிலருக்கு கால் முறிந்தது.

    இந்த நிலையில் வாடிவாசல் முன்பு திரண் டிருந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி காலை 8 மணி முதல் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் மதுரை மட்டுமல்லாது நெல்லை, குமரி, விழுப்புரம், கடலூர் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். மாலை 5 மணி ஆகியும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. உடனே போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

    இதில் ஏராளமான பெண்களும் சிறுவர்களும் கலைந்து கொண்டனர் அவர்களும் தங்களது போராட்டத்தை கைவிட மறுத்து வாடிவாசல் முன்பு தரையில் அமர்ந்தனர்.

    அப்போது போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். போராட்டக்காரர்கள் கூறும்போது வாடிவாசல் வழியாக குறைந்தது 5 காளைகளை அழைத்து வர வேண்டும் அப்போதுதான் நாங்கள் கலைந்து செல்வோம் என்றனர். இதனை போலீசார் ஏற்க மறுத்து விட்டனர்.

    இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிடாதால் அங்கு ஏராளமான அதிரடிப்படை போலீசார் வர வழைக்கப்பட்டனர். வஜ்ரா வாகனம் மற்றும் தீயணைப்பு வண்டியும் வரவழைக்கப்பட்டது.

    இரவு ஆகிய பின்பும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் அவர்களுக்கு கிராம மக்கள் தண்ணீர் பாக்கெட், பிஸ்கட் வழங்கினர். இரவு 9 மணி அளவில் போராட்டக்காரர்கள் சமையல் செய்து உணவு அருந்தினர். அவர்களுக்கு கிராம மக்கள் உதவி செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் மதுரை கலெக்டர் வீரராகவராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களை கைது செய்வது என முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

    விடிய விடிய போராட்டம் நடத்திய இளைஞர்கள் இன்று காலையில் 6 மணி அளவிலும் தங்களது போராட்டத்தை 2வது நாளாக தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து வாடிவாசலை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போலீஸ் தரப்பில் 10 நிமிடம் அவகாசம் கொடுக்கப்பட்டது. அனால் யாரும் கலைந்து செல்லாததால் போலீசார் உள்ளே புகுந்து போராட்டக்காரர்களை குண்டுகட்டாக தூக்கிசென்று கைது செய்தனர்.

    சில இளைஞர்கள் மறுத்ததால் போலீசார் அவர்களை கை கால்களை பிடித்து இழுத்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை 4 வேன்களிலும் பெண்களை ஒரு வேனிலும் போலீசார் அழைத்து சென்றனர். மொத்தம் 350 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கூறும்போது எங்களை இன்று கைது செய்தாலும் எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

    Next Story
    ×