என் மலர்
செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு தடை: பொன்.ராதாகிருஷ்ணன் சவால் என்ன ஆனது? ராமதாஸ் கேள்வி
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அலங்காநல்லூரிலும் இன்று ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் கொடூரமான முறையில் தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சராக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன் அடுத்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கும் என கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே கூறி வந்தார்.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்பட்டவுடன் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பாராட்டு விழாக்களை நடத்தி தமக்குத் தாமே மகிழ்ச்சியடைந்தார். ஆனால், கடந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை.
காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக 1960-ம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யாமல் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியாது என்பதை அவருக்கு பலமுறை சுட்டிக்காட்டிய போதும், அதை பொருட்படுத்தாமல், ‘‘ஜல்லிக்கட்டு நடக்கிறதா... இல்லையா பாருங்கள்’’ என்று அறைகூவல் விடுத்தார்.
கடந்த ஆண்டு வரை சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேக்கர் முதல் பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர்கள் வரை அனைவரும் ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று கூறி வந்தனர்.
ஆனால், கடந்த இரு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை என்றதும் மன்னிப்பு கேட்டுவிட்டு அவர்கள் அனைவரும் பதுங்கிக் கொண்டனர்.
தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரலாம். தெரிந்தே செய்த நம்பிக்கைத் துரோகத்துக்கு மன்னிப்பு உண்டா? ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தாமும் போராட நினைப்பதாகவும், மத்திய அமைச்சர் பதவி தான் தடுப்பதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது தான் தங்களின் விருப்பம்; அதற்காக தடையை மீறுவதில் கூட தவறில்லை என்று பாரதீய ஜனதா தலைவர்கள் கூறிவருகின்றனர். பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா அவரது வீட்டுக் காளையை அவிழ்த்து விட்டு தடையை மீறியிருக்கிறார்.
அவர்கள் கூறுவது நடிப்பல்ல... உண்மையெனில் அடுத்த சில வாரங்களிலாவது ஜல்லிக்கட்டு நடத்த என்ன செய்யப் போகிறார்கள்? மக்களின் உணர்வுகளை மதித்து, ஜல்லிக்கட்டுக்காக சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று மக்களுடன் நின்று மத்திய அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும்... அவர்கள் செய்வார்களா?
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.