search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி அலங்காநல்லூரில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
    X

    ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி அலங்காநல்லூரில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்

    ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தே.மு.தி.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    அலங்காநல்லூர்:

    தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கடந்த 2 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் தடை காரணமாக நடை பெற வில்லை. இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற கேள்வியுடன் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உள்ளனர்.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டுக்கான அறிவிப்பு எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை. ஆனால் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெற தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக இன்னமும் தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என்பது சந்தேகத்திற்கு இடமாகவே உள்ளது. இருப்பினும் போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கையில் காளை வளர்ப்போர் தங்களது காளைகளுக்கு பயிற்சி கொடுத்து தயார்படுத்தி வருகின்றனர்.

    மாடுபிடி வீரர்களும் அதற்காக தயாராகி வருகின்றனர். ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்தியே தீரவேண்டும் என்ற வேகத்தில் அரசியல் கட்சிகள் நாள்தோறும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    கடந்த 3-ந் தேதி ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் ம.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலும், அலங்காநல்லூரில் நேற்று முன்தினம் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதுதவிர பாலமேடு பகுதிகளில் கடையடைப்பு, உண்ணாவிரதம் போன்றவை நடத்தப்பட்டது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி பல்வேறு கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

    இந்த நிலையில் இன்று அலங்காநல்லூரில் தே.மு.தி.க. சார்பில் ஜல்லிக்கட்டு நடை பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க கட்சியின் தலைவர் விஜயகாந்த் 11.45 மணிக்கு அலங்காநல்லூர் வந்தார். இதனை தொடர்ந்து வாடிவாசல் முன்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

    அப்போது ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான தே.மு.தி.க.வினர் மற்றும் காளை வளர்ப்போர் மாடுபிடி வீரர்கள் காளைகளுடன் கலந்து கொண்டனர்.இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    Next Story
    ×