என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி மேற்கொள்ளுங்கள்: பா.ஜ.க.வுக்கு திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
    X

    இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி மேற்கொள்ளுங்கள்: பா.ஜ.க.வுக்கு திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

    தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளை குறை கூறுவதை விட்டு விட்டு இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி மேற்கொள்ளுங்கள் என்று பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.
    சென்னை :

    தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவின் மாநில செயற்குழு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். விவசாய பிரிவு மாநிலத்தலைவர் எஸ்.பவன்குமார், முன்னாள் மத்தியமந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் நெல்லை சங்கரபாண்டியன், செய்தி தொடர்பாளர் கோபண்ணா, ஜி.தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும், நெல்லை தாமிரபரணி ஆற்றில் தனியார் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நிரந்தர தடையாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி தன்னுடன் அடக்கிய விவசாய பிரிவு நிர்வாகிகளை புறக்கணிக்கிறது, எந்த நிகழ்ச்சியிலும் விவசாய பிரிவு பெயர் போடுவதில்லை என்று ஆவேசமாக பேசினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருநாவுக்கரசர் முன்னிலையில், ‘விவசாய பிரிவு நிர்வாகிகளை தாய் அமைப்பான காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் போட்டியாக நினைக்காமல், இணைந்து பணியாற்றுவதற்கான உத்தரவை மாநிலத்தலைமை வழங்க வேண்டும்’ என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்திற்கு பிறகு திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அமைச்சர்கள் விவசாயிகளின் தற்கொலையை கொச்சைப்படுத்துகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பதினால் தமிழக அரசின் கஜானா திவாலாகி விடாது. தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து, மத்திய அரசின் நிதியை கோர வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக நான் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பேன். அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். கொங்கு மண்டல மக்களின் கனவை அரசு நிறைவேற்ற வேண்டும்.

    ஜல்லிக்கட்டு பிரச்சினையில் பாரதீய ஜனதா அரசு இன்னும் மற்றவர்களை குறை கூறிக்கொண்டு தான் இருக்கிறது. தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளை குறை கூறுவதை விட்டு, விட்டு, இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். இங்குள்ள மத்தியமந்திரியும் (பொன்.ராதாகிருஷ்ணன்) வரும்...வரும் என்று சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார். பேச்சை குறைத்து செயல்பாட்டில் காட்டினால் நன்றாக இருக்கும்.

    பா.ஜ.க. அரசு பொறுப்பேற்று 3 பொங்கல் போய் விட்டது. இன்னும் 2 பொங்கல் தான் இருக்கிறது. பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. அவசர சட்டத்தை கொண்டு வந்து, நீதிமன்றத்தை அணுகி ஜல்லிக்கட்டை நடத்த இங்குள்ள அ.தி.மு.க. அரசும், மத்திய பா.ஜ.க.வும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். தமிழக மக்கள் கோபமாக இருக்கிறார்கள். எனவே ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×