search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணம் பற்றிய சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
    X

    ஜெயலலிதா மரணம் பற்றிய சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

    மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றிய சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    எதிர்பார்க்கும் 2017 என்ற தலைப்பில் பா.ம.க. பொதுக்கூட்டம் தியாகராய நகரில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் டாக்டர் அன்புமணி எம்.பி. பேசியதாவது:-

    தமிழகம் ஊழல் நிறைந்த மாநிலமாக மாறி விட்டது. தலைமைச் செயலாளர் ஊழல் வழக்கில் சிக்கி சோதனை நடத்தப்பட்டதும் இந்தியாவிலேயே இங்குதான் நடந்தது. அந்த அளவுக்கு தரம் தாழ்ந்த தலைமைச் செயலாளர் பதவியில் இருந்துள்ளார்.

    6 மாதங்களுக்கு முன்பே ராமமோகனராவ் ஊழல்வாதி என்று டாக்டர் ராமதாஸ் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டார். ஆனால் அதை ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை.

    அ.தி.மு.க.வின் ஊழலால் தமிழ்நாட்டுக்கு அவமானம். தி.மு.க.வின் 2ஜி ஊழலால் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு அவமானம். இந்த இரு கட்சிகளும் நாட்டை சீரழித்தது போதும்.

    கடந்த தேர்தலில் பா.ம.க. வெற்றி பெறவில்லை. ஆனால் 3-வது பெரிய கட்சியாக வளர்ந்து இருக்கிறோம். எங்கள் அளவுக்கு கொள்கை யாரிடம் இருக்கிறது? மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தது யார்?

    மது ஒழிப்பு பற்றி எல்லோரும் பேசினர். முடிந்ததா? நாங்கள் வழக்கு போட்டு முதல் வெற்றியை அடைந்துள்ளோம். நாடார் சமுதாயம் பற்றி இழிவான கருத்து பாட புத்தகத்தில் வெளியானதை எதிர்த்து வழக்கு போட்டு நீக்க வைத்தோம்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தார். அங்கு என்ன நடந்தது? எப்படி இறந்தார்? என்ன நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. அவர் சாதாரண பெண் அல்ல. முதல்-அமைச்சர்.

    அவரது உடல்நிலை பற்றி அறியும் உரிமை மக்களுக்கு உண்டு. நான் ஒரு டாக்டர் என்ற முறையில் சொல்கிறேன். 75 நாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றால் 15 முதல் 20 கிலோ உடல் எடை மெலியும் அப்படியா அவரது உடல் இருந்தது?

    சிகிச்சையில் இருந்த போது பதிவான வீடியோ பதிவுகளை வெளியிடுங்கள். நீதிபதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், கட்சி தொண்டர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதை தெளிவுபடுத்தத்தான் வெள்ளை அறிக்கை கேட்கிறோம். தேவைப்பட்டால் உண்மையை வெளியிட கோரி போராட்டம் நடத்துவோம்.

    தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. மாநில அரசு, மத்திய அரசிடம் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது கேட்டு கோரிக்கை வைத்துள்ளது. ஊழல் வழக்கில் 2 முறை ஜெயிலுக்கு சென்றதற்காகவா விருது வழங்குவார்கள். பாரத ரத்னா என்பது அப்பழுக்கற்ற தலைவர்களுக்கு வழங்கப்படுவது. அந்த தகுதி ஜெயலலிதாவுக்கு இருக்கிறதா?

    நோபல் பரிசு வழங்க கேட்டு பொதுக்குழுவில் தீர்மானம் போட்டுள்ளார்கள். உயிரோடு இருப்பவர்களுக்கு வழங்கப்படுவதுதான் நோபல் பரிசு. அதுகூட தெரியாமல் தீர்மானம் போடுகிறார்கள். தமிழகத்தின் நிலையை பார்த்து டெல்லிக்காரர்கள் சிரிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆற்று மணலை கொள்ளையடிக்கவில்லை. பெருக்கெடுத்து ஓடும் தண்ணீருக்கு தடையாக இருக்கும் மணல் மேடுகளைத்தான் சீர்படுத்தி வருகிறார்கள். கல் குவாரிகள் மலையை வெட்டி சமப்படுத்துகின்றன.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடித்தவர்களுக்கு 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க தாள் கிடைக்கவில்லை. ஆப்பக் கடை ஆயாவும் பூ விற்கும் பொன்னம்மாவும் டிஜிட்டலில்தான் பேசுகிறார்கள்.

    டாஸ்மாக் கடை திறந்ததால் என்ன பிரச்சினை? அங்கு கூட்டமே இல்லை. ஜெயலலிதா சமாதியிலும், போயஸ் கார்டனில் மட்டும்தான் கியூ நிற்கிறது.

    ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என்று ஒவ்வொரு ஆண்டும் பொன்னார் சொல்கிறார். இந்த ஆண்டும் சொல்வார். ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல ராமமோகன ராவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கலாம்.

    இப்படிப்பட்ட கண்ணான தேசத்தில் வாழ்கிறோம். எதிர்பார்க்கும் 2017 எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, கே.என்.சேகர், வக்கீல் பாலு, ஜெயராமன், ஈகை தயாளன், மாம்பலம் வினோத் நாடார், கன்னியப்பன், சகாதேவன், வக்கீல் வி.எஸ்.கோபு, ஜெய்சங்கர், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×