search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவின் இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
    X

    ஜெயலலிதாவின் இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஐகோர்ட்டு கூறியுள்ளதால் உண்மையை வெளிக்கொண்டு வர சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மறைந்த தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கமளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு ஆணையிட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்ற குற்றச்சாட்டுகளுக்கு முதற் கட்ட ஆதாரங்கள் இருப்பதாக சென்னை ஐகோர்ட்டு கருதுகிறது என்பதற்கான அடையாளமாகவே நீதிபதிகளின் இந்த உத்தரவை பார்க்க வேண்டியிருக்கிறது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

    ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி வைத்தியநாதன் எழுப்பியுள்ள வினாக்கள் முக்கியமானவை. “ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. அவர் குணமடைந்து வருகிறார்; உணவு சாப்பிடுகிறார்; நடைபயிற்சி மேற்கொள்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின. ஆனால், திடீரென அவர் மரணம் அடைந்தது எப்படி? அவரை பார்க்க அவரது உறவினர்களை ஏன் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகாவது அதில் உள்ள மர்மங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்” என்று நீதிபதி வைத்தியநாதன் கூறியிருக்கிறார்.

    தமிழக மக்களின் மனதில் என்னென்ன வினாக்கள் எழுந்துள்ளனவோ, அந்த வினாக்களையெல்லாம் ஐகோர்ட்டு நீதிபதி எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து அவர் இறக்கும் வரை அவரது உடல் நிலை குறித்து அரசுத் தரப்பிலிருந்து ஒரே ஒரு அறிக்கை கூட வெளியிடப்படவில்லை. மாறாக, அப்பல்லோ நிர்வாகம் தான், சிலரது விருப்பப்படி அவர்கள் சொல்ல விரும்பிய கருத்துகளை மருத்துவ அறிக்கையாக வெளியிட்டு வந்தது. வழக்கமாக இத்தகைய சூழலில் சுகாதாரத்துறை செயலர் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு, முதல்- அமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை அக்குழு கண்காணித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையை சுகாதாரத்துறை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டும்.

    கடந்த காலங்களில் அத்தகைய நடைமுறை தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஜெயலலிதா விஷயத்தில் இந்த நடைமுறை ஒருபோதும் கடைப்பிடிக்கப்படவில்லை. ஜெயலலிதா தனி மனிதராக இருந்தாலோ, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக மட்டும் இருந்திருந்தாலோ அவரது மரணத்தில் உள்ள மர்மம் குறித்து மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நான் கேள்வி கேட்க வேண்டிய தேவையில்லை. ஆனால், ஜெயலலிதா தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மர்மமான சூழலில் மரணமடைந்திருக்கிறார்.

    ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறியும் உரிமை தமிழக மக்களுக்கு உண்டு. இந்த உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டுமென்று தமிழக மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் துடிக்கின்றனர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி அக்கட்சியினர் வழக்கு தொடர்ந்திருப்பதே இதற்கு சாட்சியாகும்.

    மறைந்த முதல்-அமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு விடை காணப்பட வேண்டும். இதுதொடர்பாக கோர்ட்டு எழுப்பியுள்ள வினாக்களுக்கு விடையளிப்பதுடன், மக்களுக்கும் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவை ஒருபுறமிருக்க, ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×