search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா - பான்மசாலா வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய 20 போலீஸ் அதிகாரிகள் சிக்குகிறார்கள்
    X

    குட்கா - பான்மசாலா வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய 20 போலீஸ் அதிகாரிகள் சிக்குகிறார்கள்

    குட்கா - பான்மசாலா வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் தொடர்புடைய 22 போலீஸ் அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் தடைவிதித்தது.

    இதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    பான் மசாலா, குட்காவை விற்பனை செய்யும் சிறிய பெட்டிக் கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. தடையை மீறி விற்ற சிறு வியாபாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதற்கு பயந்து பெரும்பாலான மளிகை கடைகாரர்கள், சிறு வியாபாரிகள் பான் மசாலா, குட்கா ஆகியவற்றை சில காலம் நிறுத்தி வைத்திருந்தனர். இப்போது தங்கு தடையின்றி அனைத்து கடைகளிலுமே பான் மசாலாவும், குட்காவும் கிடைக்கிறது.

    போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் மாதவரத்தை அடுத்த வடபெரும்பாக்கத் தில் வட மாநில மொத்த வியாபாரி ஒருவர், 2 பெரிய குடோன்களை நடத்தி வந்தார்.

    அதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த குடோன்கள் போலீசாரின் கண்ணில் படவில்லை.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், போதை பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த குடோன் கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென புகுந்து சோதனை நடத்தினர்.

    அப்போது பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுடன், அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறி முதல் செய்து கணக்கிட்டு பார்த்த போது 100 டன் அளவுக்கு மூலப்பொருட்கள் இருந்தது.

    கணக்கில் வராத ரூ.75 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டது. ரூ.320 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக குடோன் மேலாளர் ஒருவர் சிக்கினார். அவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

    போதைப் பொருட்களை விற்பனை செய்த சிறிய பெட்டிக்கடைகாரர்கள் கூட போலீசில் சிக்கி வந்த நிலையில், இவ்வளவு பெரிய குடோனில் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது போலீசுக்கு எப்படி தெரியாமல் போனது என்கிற சந்தேகம் வருமான வரித்துறையினர் மத்தியில் பூதாகரமாக எழுந்தது. இந்த கோணத்தில் குடோன் மேலாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதன் அடிப்படையில் அண்ணா நகரில் உள்ள மேலாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

    அதில் குடோனுக்கு வந்து சோதனை செய்யாமல் இருப்பதற்கும், தடையின்றி போதை பொருட்கள் வியாபாரம் நடப்பதற்கும் ஏதுவாக போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவரம் பட்டியல் போட்டு வைக்கப்பட்டிருந்தது.

    ஒவ்வொரு மாதமும் கீழ்மட்டத்தில் இருக்கும் போலீசாரில் தொடங்கி உயர் போலீஸ் அதிகாரிகள் வரை யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

    சென்னையில் கமி‌ஷனர்களாக பணியாற்றிய 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெயர் இடம் பெற் றிருந்தது. இது தவிர 6 கூடுதல் கமி‌ஷனர்கள், 5 இணை கமி‌ஷனர்கள், 5 துணை கமி‌ஷனர்கள் ஆகியோரது பெயரும் இருந்தது. மாதவரம் பகுதியில் பணியாற்றிய 2 போலீஸ் உதவி கமி‌ஷனர்களின் பெயரும் டைரியில் இருந்தது.

    இவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் மாதம் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டிருந்த விவரங்கள் புள்ளி விவரங்களுடன் இருந்தது. இதைப் பார்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி முறைப்படி, அப்போது தலைமை செயலாளராக இருந்த ராம மோகனராவுக்கு வருமான வரித்துறையினர் கடிதம் அனுப்பினர். ஆனால் அது தொடர்பாக மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அந்த விவகாரம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

    இந்நிலையில் வருமான வரி சோதனையில் சிக்கிய ராமமோகனராவ் தலைமை செயலாளர் பதவியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு, புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றார்.

    அவருக்கு சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோன் உரிமையாளரிடம் இருந்து போலீஸ் அதிகாரிகள் பலர் பணம் வாங்கியுள்ளனர். மாநகர போலீசின் உளவு பிரிவும் அதை உறுதி செய்துள்ளது. தற்போது அரசியல் சூழ்நிலையும் ஆட்சி நிர்வாகமும் மாறி இருக்கும் நிலையில் மாநில உளவு பிரிவான எஸ்.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் லஞ்ச ஒழிப்பு துறையோ அல்லது சி.பி.ஐ. அதிகாரிகளோ விசாரணை நடத்தினால் உண்மை நிலவரம் வெளியில் வரும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    கமி‌ஷனர் ஜார்ஜின் இந்த கடித விவகாரம் தமிழக போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பீதியையும் கிளப்பி இருக்கிறது. இதனால் தலைமை செயலாளராக இருந்த ராமமோகனராவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் அவருக்கு நெருக்கமாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் போதைப் பொருள் வியாபாரியிடம் போலீசார் லஞ்சம் வாங்கிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதால் அதில் தொடர்புடைய ஐ.பி.எஸ். அதிகாரிகளும் கலங்கிப் போய் உள்ளனர்.

    இதற்கிடையே தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டா லின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

    இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக விரைவில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று கூறப்படுகிறது.

    அப்போது இந்த விவகாரத்தில் தொடர்புடைய 22 போலீஸ் அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×