search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளையாட்டு வீரருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்: ஐகோர்ட்டு
    X

    விளையாட்டு வீரருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்: ஐகோர்ட்டு

    விபத்தில் வலது காலை இழந்த விளையாட்டு வீரருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.விமலா உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் எம்.பிரேம்குமார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு பிளஸ்-2 படித்துக்கொண்டிருந்தார். 2008-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி, சாலையில் செல்லும்போது தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் மோதியதில், அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது.

    இதையடுத்து ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘போக்குவரத்து கழகம் ரூ.3 லட்சத்து 48 ஆயிரத்து 947-யை இழப்பீடாக நிர்ணயம் செய்து கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தார்.

    இந்த இழப்பீடு தொகை போதாது என்று கூறி சென்னை ஐகோர்ட்டில், பிரேம்குமார் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். பின்னர், நீதிபதி எஸ்.விமலா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    ஒரு விபத்தில் தன்னுடைய உடல் உறுப்பை இழப்பது என்பது மரணத்தை விட கொடியது ஆகும். இதனால், அந்த நபரின் எதிர்கால கனவு, லட்சியம், சந்தோஷம் என்று அனைத்தும் நொறுங்கி விடுகின்றன.

    மனுதாரர் பிரேம்குமார் விபத்தில் தன்னுடைய வலது காலை இழந்துள்ளார். அவருக்கு 80 சதவீத ஊனம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். அவர் அனுபவிக்கும் ‘வலி’ என்ன? என்பதை புரிந்துகொள்ளாமல், கீழ் கோர்ட்டு அவருக்கு ரூ.3.48 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது.

    தன்னுடைய 19-வது வயதில் தன்னுடைய காலை அவர் இழந்துள்ளார். இத்தனைக்கும் அவர் சிறந்த விளையாட்டு வீரர். கபடி, வட்டு எறிதல், நீண்டதூர ஓட்டம், சைக்கிள் போட்டி, கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் வெற்றிபெற்றுள்ளார். 70-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வைத்துள்ளார். பிரேம்குமாரின் லட்சியமே படித்து முடித்ததும், போலீஸ் அதிகாரியாவது என்பது தான். அவர் நன்றாக இருந்திருந்தால், விளையாட்டு வீரர்கள் இடஒதுக்கீட்டில் மிகப்பெரிய பதவியை பெற்று, பெரும் தொகையை சம்பாதித்து இருப்பார். அவரது கனவு எல்லாம் உடைந்து நொறுங்கி விட்டது.

    விபத்தில் உடல் உறுப்புக்களை இழப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை இழப்பீடு நிர்ணயிக்கலாம் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் விவரங்களை மனுதாரர் வக்கீல், இந்த ஐகோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

    எனவே, மனுதாரருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிடுகிறேன். இந்த தொகையை 7.5 சதவீத வட்டியுடன் 4 வாரத்துக்குள் வழங்கவேண்டும். மருத்துவச்செலவு உள்ளிட்ட பல செலவுகளை மேற்கொண்டுள்ளதால், இந்த இழப்பீட்டு தொகையில் இருந்து ரூ.10 லட்சத்தை மட்டும் மனுதாரர் பிரேம்குமார் எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள ரூ.20 லட்சத்தை வங்கியில் அவரது பெயரில் டெபாசிட் செய்யவேண்டும். இந்த தொகையில் இருந்து கிடைக்கும் வட்டியை அவர் எடுத்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு நீதிபதி எஸ்.விமலா உத்தரவிட்டுள்ளார். 
    Next Story
    ×