என் மலர்
செய்திகள்

மகளை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தை மீது தாக்குதல்: வாலிபர் கைது
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அருகே உள்ள கீழநம்மங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது45). விவசாயி. இவருடைய மகன் கஜேந்திரன் (23), மகள் கீர்த்தனா (18). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். இவர்களை, அதே பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (27) என்பவர் கிண்டல் செய்துள்ளார்.
இதையடுத்து கீர்த்தனா, தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக சிங்காரவேலு, சுரேந்திரனை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேந்திரன் பிளேடால் சிங்காரவேலுவின் கைகளில் கிழித்து தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் காயம் அடைந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து சிங்காரவேலு முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரை திருத்துறைப்பூண்டி சப்-மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.