search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு
    X

    திண்டுக்கல் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு

    திண்டுக்கல் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் வீணாகி செல்கிறது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நகரில் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் பின்னர் விரிவுபடுத்தப்பட்டு நத்தம் பகுதிக்கும் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. எம்.வி.எம். நகரில் இருந்து குடிநீர் குழாய்கள் அனுமந்தன் நகர், குள்ளனம்பட்டி, ரெட்டியபட்டி, ஆர்.எம்.டி.சி. நகர், நொச்சிஓடைப்பட்டி வழியாக கோபால்பட்டி வரை செல்கிறது.

    இந்த வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் குழாய் உடைப்பு அடிக்கடி ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்வது நடந்து வருகிறது. இது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லாததால் குடிதண்ணீர் வீணாகி சாக்கடையில் கலந்து வருகிறது.

    இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கூறுகையில், அனுமந்தநகர் அருகில் உள்ள சவுந்தரராஜா மில் பகுதியில் காவிரி கூட்டுக்குடி நீர் திட்ட குழாயில் கடந்த ஒரு மாதமாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்கிறது.

    இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் சீராக கிடைப்பதில்லை. இதனால் சாணார்பட்டி, கொசவபட்டி, கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் அடிக்கடி மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குடி தண்ணீருக்காக பெண்கள் 2 கி.மீ தூரம் வரை சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். ஆனால் மக்களின் தேவைக்காக பொருத்தப்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்கிறது. அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுத்து இதனை சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×