search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 800 பெண் போலீசுக்கு வரவேற்பாளர் பயிற்சி
    X

    சென்னையில் 800 பெண் போலீசுக்கு வரவேற்பாளர் பயிற்சி

    சென்னையில் 800 பெண் போலீசுக்கு வரவேற்பாளர் பயிற்சி முகாமில் தி.நகர் துணை கமி‌ஷனர் சரவணன் பங்கேற்று பெண் போலீசுக்கு பயிற்சி அளித்தார்.

    சென்னை:

    சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் நீண்ட நாட்களாகவே வர வேற்பாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் பெண் போலீசாரே வரவேற்பாளராக நியமிக்கப்படுவார்கள்.

    போலீஸ் நிலையத்துக்கு குறைகளுடனும், புகார் மனுக்களுடனும் வரும் பொது மக்களிடம் கனிவாக பேசி, புகார்களுக்கு ஏற்ப யாரை சந்திக்க வேண்டுமோ, அதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.

    இப்படி வரவேற்பாளர்களாக பணிபுரியும் பெண் போலீசார், பொது மக்களிடம் கோபப்படாமல் இன் முகத்தோடு பேசி குறைகளை கேட்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதன்படி சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் இடமாறுதல் மற்றும் ஆயுதப்படையில் இருந்து பணி அமர்த்தப்பட்ட பெண் போலீசார் பலர், சென்னை மாநகர காவல் நிலையங்களில் உள்ளனர்.

    ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் 6 பேரில் இருந்து 8 பேர் வரை இது போன்று புதிதாக சட்டம்- ஒழுங்கு பணிக்கு வந்துள்ளனர். இதன்படி சென்னை போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளராக பணி அமர்த்தப்பட உள்ள 800 பெண் போலீசாருக்கு வரவேற்பாளர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக போலீசாருக்கு இந்த பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது.

    தென் சென்னையில், அடையாறு, பரங்கிமலை, தி.நகர் பகுதிகளை சேர்ந்த பெண் போலீசுக்கு வரவேற்பாளர் பயிற்சி அளிக்கப்பட்டது. கமி‌ஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமி‌ஷனர் சங்கர், இணை கமி‌ஷனர் அன்பு ஆகியோரது மேற்பார்வையில், இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

    தி.நகர் வர்கிட் ரோட்டில் அரங்கம் ஒன்றில் நடந்த பயிற்சி முகாமில், தி.நகர் துணை கமி‌ஷனர் சரவணன் பங்கேற்று பெண் போலீசுக்கு பயிற்சி அளித்தார். அப்போது பேசிய அவர், வரவேற்பாளர்களாக பணியாற்றும் பெண் போலீசார் கடமை உணர்வோடும், தன்னார்வத்துடனும் பணி புரிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    உதவி கமி‌ஷனர்கள் ராதாகிருஷ்ணன், அண்ணா துரை, கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் எம்.எஸ்.பாஸ்கர், வக்கீல் கிரிஜா வெங்கட்ரமணன் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×