என் மலர்
செய்திகள்

அறந்தாங்கி அருகே செல்போன் கடையில் கொள்ளை: 2 பேர் கைது
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் செந்தில்வேலன். இவர் அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் செல்போன் விற்பனை மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி இரவு அவரது கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடையின் உள்ளே இருந்த ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள 33 செல்போன்கள், ரீசார்ஜ் கார்டுகள், பென் டிரைவ்கள், செல்போன் உதிரி பாகங்களை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இதுகுறித்து செந்தில்வேலன் கொடுத்த புகாரின்பேரில் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை கைது செய்யுமாறு நாகுடி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் உத்தரவிட்டார்.
இதையடுத்து அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு செல்லபாண்டியன் மேற்பார்வையில் அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் நாகுடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று காலை நாகுடி சப்-இன்ஸ்பெக்டர் மனோக ரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி, தனிப் பிரிவு காவலர் அண்ணாத்துரை ஆகியோர் அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில் ஆவுடையார் கோவில் பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நாகுடி பகுதியில் இருந்து இரண்டு வாலிபர்கள் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த மோட்டார் சைக்கிளில் கம்பியை அறுக்கப்பயன்படும் கட்டர் இருந்தது. இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விசாரித்தபோது அவர்கள் இருவரும் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள மஞ்சக்குடி வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் நாகுடி நடந்த செல்போன் கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
உடனே அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களில் ஒருவர் ரமேஸ் என்பதும், அவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஹாலோபிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் எனவும், மற்றொருவர் செல்வசரவணன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி மாணவர் எனவும் தெரிய வந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் செல்போன் கடையில் கொள்ளை அடித்துச் சென்ற ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
நாகுடி செல்போன் கடையில் கொள்ளை நடந்த 4 நாட்களுக்குள் துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்து, கொள்ளை போன பொருள்களை மீட்ட நாகுடி போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோக நாதன், அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு செல்லபாண்டியன் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.






