என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமச்சந்திரன்,  ரத்தினம்
    X
    ராமச்சந்திரன், ரத்தினம்

    சேகர் ரெட்டியின் வலதுகரமாக செயல்பட்ட ரத்தினம் - ராமச்சந்திரன்

    சேகர் ரெட்டியின் வலதுகரமாக செயல்பட்டு வந்த ரத்தினம், ராமச்சந்திரன் முறைகேடாக பல கோடி ரூபாய் வரை சுருட்டியுள்ளதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.
    புதுக்கோட்டை:

    சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் தங்கம் பதுக்கியதாக தமிழகத்தை சேர்ந்த காண்டிராக்டரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி, கூட்டாளி பிரேம் ஆகியோரது வீடுகளில் சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி 131 கோடி ரூபாய், 171 கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    சேகர்ரெட்டி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவரது ஆதரவாளர்களான தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம், அவரது சகோதரர் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இதனால் முத்துப்பட்டினம் ராமச்சந்திரனின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் புதுக்கோட்டைக்கு நேற்று 5 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணி வகுத்து வந்தன. சிறிது நேரத்தில் கார்கள் அனைத்தும் அறந்தாங்கி நோக்கி சென்றன. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் தான் வந்துள்ளதாகவும், முத்துப்பட்டினம் ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் வீட் டில் சோதனை நடத்தப்படவுள்ளதாகவும் தகவல் பரவியது.

    ஆனால் மாவட்டத்தில் சோதனை எதுவும் நடத்தப்படவில்லை. பின்னர்தான் காரில் வந்தவர்கள் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வசிஷ்டஜோரி, மதுரை கோட்ட மேலாளர் சுனில் கார்க் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் என்பது தெரிய வந்தது.

    ரெய்டு பீதி தற்காலிகமாக ஓய்ந்தாலும் மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள், அவருக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ரெய்டு பீதியில் உள்ளனர். ராமச்சந்திரன் மணல் குவாரி மட்டுமின்றி பல நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

    அதுமட்டுமின்றி சேகர் ரெட்டியின் வலதுகரமாக செயல்பட்டு வந்த ராமச்சந்திரன் முறைகேடாக பல கோடி ரூபாய் வரை சுருட்டியுள்ளதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.

    மேலும் சேகர் ரெட்டி இல்ல சுப நிகழ்ச்சிக்காக புதுக்கோட்டையில் இருந்து சமையல் உள்ளிட்ட பணிகளுக்காக 200 பேர் அ.தி.மு. க. பிரமுகரால் அழைத்து செல்லப்பட்டதும், முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போது 2 மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்பு உள்ளிட்ட பல பணிகளுக்காக 400 இளைஞர்கள் அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களும் ரெய்டு பீதியில் உள்ளனர்.

    மேலும் புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் ராஜகோபாலபுரத்தில் சேகர் ரெட்டிக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டை முக்கிய புள்ளி ஒருவர் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தவிர புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு எதுவும் வீடுகள், மனைகள் உள்ளதா? என்றும் ரகசிய விசாரணை நடந்து வருகிறது.

    கைதான ராமச்சந்திரன் முத்துப்பட்டினம் பகுதியில் தற்போது புதிதாக வேளாண் கல்லூரி ஒன்றை கட்டி வருகிறார். பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார். அது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

    இதனிடையே சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் மற்றும் பினாமிகள் திருச்சி-கரூர் மாவட்டங்களில் மணல் குவாரிகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய தகவலை அறிந்ததும், கூட்டாளிகள், பினாமிகள் அனைவரும் தங்களது மணல் குவாரிகள் மற்றும் அலுவலகங்களை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்களின் விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×