என் மலர்
செய்திகள்

நண்பர்களுடன் மது குடித்த ஈரோடு புதுமாப்பிள்ளை பலி: பெற்றோர் அதிர்ச்சி
ஈரோடு:
ஈரோடு கருகல்பாளையத்தைச் சேர்ந்தவர் சித்திக். இவரது மகன் அப்பாஸ் மந்திரி. (வயது25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் அடுத்த மாதம் 18-ந்தேதி திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்திருந்தனர். திருமண ஏற்பாடுகளை அவர்கள் செய்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க அப்பாஸ் மந்திரி வந்தார். அவர் கிண்டியை அடுத்த மடுவன்கரை சக்கரபாணி தெருவில் உள்ள வீட்டில் நண்பர்களுடன் தங்கினார்.
நேற்று இரவு அப்பாஸ் மந்திரி நண்பர்களுக்கு மது விருந்து வைத்தார். அப்போது அவரும் மது குடித்து இருக்கிறார். போதையில் அனைவரும் தூங்கி விட்டனர்.
இன்று காலை அப்பாஸ் மந்திரி ஈரோடு செல்ல இருந்தார். ஆனால் அவர் படுக்கையில் இருந்து எழவில்லை.
சந்தேகம் அடைந்த நண்பர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அப்பாஸ் மந்திரி ஏற்கனவே மாரடைப்பில் இறந்து இருப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பாஸ் மந்திரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் சென்னைக்கு வந்துக் கொண்டு இருக்கிறார்கள். நிச்சயித்த மாப்பிள்ளை இறந்ததால் மணமகள் வீட்டாரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
புதுமாப்பிள்ளை அப்பாஸ் மந்திரி நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.