search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு பிரச்சினையால் தமிழகத்தில் தங்க நகை விற்பனை 90 சதவீதம் பாதிப்பு
    X

    ரூபாய் நோட்டு பிரச்சினையால் தமிழகத்தில் தங்க நகை விற்பனை 90 சதவீதம் பாதிப்பு

    ரூபாய் நோட்டு பிரச்சினையால் தமிழகத்தில் தங்க நகைகள் விற்பனை 90 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளதாக வியாபாரிகள் சம்மேளன தலைவர் ஸ்ரீராம் கூறினார்.
    சேலம்:

    தமிழ்நாடு தங்க, வெள்ளி, வைர வியாபாரிகள் சம்மேளனத்தின் தலைவர் ஸ்ரீராம் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் பழைய நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் தற்போது மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பணம் எடுத்து செல்கிறார்கள். இந்த அறிவிப்பால் தமிழகத்தில் 40 நாட்களில் தங்க நகைகள் விற்பனை 90 சதவீதம் வரை பாதிப்பு அடைந்துள்ளது. பணம் புழக்கம் இல்லாததால் தங்கத்தின் மீதான நாட்டம் பொதுமக்களிடையே குறைந்து விட்டது.

    ரிசர்வ் வங்கி தங்கத்தின் தரம் குறித்து இதுவரை 5 வகையான ஹால்மார்க் முத்திரையை வைத்து இருந்தன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து இந்த ஹால்மார்க் முத்திரை 3 வகையாக மட்டுமே பயன்படுத்திட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த அறிவிப்பால் 22 கேரட் தங்கத்தை 916 ஹால்மார்க் என்றும், 18 கேரட் தங்கத்தை 750 ஹால்மார்க் என்றும், 14 கேரட் தங்கத்தை 565 ஹால்மார்க் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, ஹால்மார்க் குறித்தும், தங்கத்தின் தரம் குறித்தும், பொதுமக்கள் ஆராய்ந்து தெரிந்து கொண்டு நகைகளை வாங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×