என் மலர்

  செய்திகள்

  சேலம் ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: கொள்ளையர்களை நெருங்கும் போலீசார்
  X

  சேலம் ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: கொள்ளையர்களை நெருங்கும் போலீசார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் ரெயிலில் மேற்கூரையை துளையிட்டு மர்ம நபர்கள் ரூ. 5.75 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை நெருங்கி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

  கொண்டலாம்பட்டி

  சேலத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக சென்னை செல்லும் எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள வங்கிகளின் மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கட்டுக் கட்டாக பணம் தனிப்பெட்டியில் வைத்து போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது.

  இந்த ரெயில் சென்னை வந்தடைந்ததும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் வங்கி அதிகாரிகள் ரெயில் பெட்டியில் சீல்களை அகற்றி கதவை திறந்து பார்த்தபோது, அதில் ஒரு பெட்டியின் மேற்கூரையை துளையிட்டு அதற்குள் மர்ம நபர்கள் புகுந்து ரூ. 5.75 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.


  ஓடும் ரெயிலில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது தெரிய வந்தது. இந்த கொள்ளை வழக்கை அப்போதைய டி.ஜி.பி. அசோக்குமார் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டார்.

  மேலும் சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமார் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

  இந்த தனிப்படையில் இன்ஸ்பெக்டர்கள் மணிவர்மன், நாகராஜன், குமரேசன், வின்சென்ட் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் மற்றும் போலீசார் இடம் பெற்றுள்ளனர்.

  இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், இந்த தனிப்படை போலீசாரும் ஈரோடு, கோவை, சேலம், விருத்தாசலம், சென்னை எழும்பூர் உள்ளிட்ட ரெயில் தடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

  கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி பழைய ரூ.500, ரூ.1000 ரோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் டாஸ்மாக் கடைகளில் ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் பெறப்பட மாட்டாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது.

  இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி அன்று சேலம் புதிய பஸ் நிலையம் 5 ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை வட மாநிலத்தை சேர்ந்த சிலர் மாற்ற முயற்சி மேற்கொண்டனர். இதனால் அவர்களுக்கும், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

  பின்னர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் 100 ரூபாய் நோட்டை கொடுத்து மது வாங்கிக் கொண்டு, டாஸ்மாக் கடையின் அருகே உள்ள பாரில் அமர்ந்து மது குடித்தனர்.

  அப்போது போதை தலைக்கேறிய நிலையில் ரெயில் கொள்ளை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு வங்கி கொள்ளை சம்பவத்தை பற்றி பேசியதாக தெரிகிறது.

  இது பற்றிய தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்தது. இதை தொடர்ந்து சுறு சுறுப்பு அடைந்த சி.பி.சி.ஐ.டி, போலீசார் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரிடம் விசாரித்தபோது 2014-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன அள்ளி அருகே உள்ள பரோடா வங்கியில் கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பதும்,

  இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படங்கள் கிடைத்தது.

  இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் ரெயில் கொள்ளை மற்றும் வங்கி கொள்ளையில் ஈடுபடுவதை உறுதிபடுத்தினார்கள்.

  இந்த கொள்ளை கும்பல்கள் ரெயில் பெட்டிகளில் இணைக்கப்பட்டிருக்கும் சரக்கு பெட்டியில் புகுந்து அங்கிருக்கும் பொருட்களை கொள்ளையடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதில் கைது செய்யப்பட்ட நபர்களின் தகவல்களை சேகரித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளார்கள்.

  மேலும் சேலத்தில் இருந்து சென்னை சென்ற எழும்பூர் ரெயிலில் கொள்ளை அடித்ததும் இந்த கும்பல் தான் என சி.பி.சி.ஐ.டி போலீசார் உறுதி செய்தனர்.

  சென்னை, பெங்களூர், ஆந்திரா, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ்நிலையங்கள், பொது இடங்களில் கொள்ளையர்களின் 5 உருவபடங்களை வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

  ரெயில் கொள்ளை குறித்து போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்தால் அந்த தகவல்களை ரகசியம் காக்கப்படும் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு அரசின் சார்பில் சன்மானம் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

  இந்த ரெயில் கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமல் தவித்து வந்த போலீசாருக்கு தற்போது கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் என தெரிகிறது.

  Next Story
  ×