search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வார்தா புயலின் போது வாகனத்தில் அடிபட்டு பலியான பூசாரி
    X

    வார்தா புயலின் போது வாகனத்தில் அடிபட்டு பலியான பூசாரி

    வர்தா புயலின் போது வாகனத்தில் அடிபட்ட பூசாரியின் உடல் இரண்டு துண்டாகி 25 கி.மீ தூரத்துக்கு இழுத்துச்செல்லப்பட்டது. பூசாரி ஒருவர் கோரமான முறையில் பலியான சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
    சென்னை:

    சென்னையில் கடந்த 12-ந் தேதி வர்தா புயல் கோரத்தாண்டவம் ஆடி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் பூசாரி ஒருவர் கோரமான முறையில் பலியான சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

    புதிய பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் வாசுதேவன். 75 வயது பூசாரியான இவர் வீடுகளுக்கு சென்றும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு சென்று பூஜைகள் செய்து கொடுப்பது வழக்கம். கடந்த திங்கட்கிழமை காலை 9 மணிக்கு புயல் லேசாக தாக்கத் தொடங்கிய போது வாசுதேவனும் மேலும் 2 பூசாரிகளும் சேர்ந்து பூஜைக்காக வெளியில் சென்றனர்.

    மற்ற இருவரும் வீடு திரும்பிய நிலையில் இரவு நேரம் ஆகியும் வாசுதேவன் வீடு திரும்பவில்லை. மற்ற 2 பூசாரிகளிடம் குடும்பத்தினர் விசாரித்த போது, வாசுதேவன் அன்று மாலையில் கிண்டியில் இருந்து பெருங்களத்தூர் செல்ல பஸ்சில் புறப்பட்டார். பெருங்களத்தூருக்கு பஸ் செல்லாததால் தாம்பரம் பஸ்சில் சென்றதாக தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மறுநாள் பீர்க்கங்கரணை போலீசில் புகார் செய்தனர். அதன்பிறகு வாசுதேவன் எங்காவது ஆஸ்பத்திரியில் இருக்கிறாரா? என்று அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் குடும்பத்தினர் விசாரித்தனர்.

    அப்போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வாசுதேவன் உடலின் மேல்பகுதி மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பது தெரியவந்தது. உடனே குடும்பத்தினர் சென்று வாசுதேவன் உடலை அடையாளம் காட்டி உறுதிசெய்தனர்.

    உடலின் மற்றொரு பகுதி எங்கே என்று விசாரித்த போது கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருப்பது தெரியவந்தது. பாடி கொரட்டூரில் இந்த பாதி உடல் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

    சம்பவத்தன்று தாம்பரம் வந்து இறங்கிய வாசுதேவன் ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்றபோது அந்தப் பக்கமாக வேகமாக வந்த வாகனம் பலமாக மோதியது. இதில் வாசுதேவன் உடல் இரண்டு துண்டாக சிதைந்தது.

    உடலின் தலைப்பகுதி தாம்பரம் பகுதியில் கிடந்தது. மற்றொரு பகுதி 25 கி.மீ. தூரத்துக்கு பாடி கொரட்டூர் வரை வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்டு வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    வாசுதேவனின் இரு உடல் பாகங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

    Next Story
    ×