என் மலர்

    செய்திகள்

    பருவ மழை பெய்யாததால் வறட்சியின் பிடியில் நெல்லை மாவட்டம்
    X

    பருவ மழை பெய்யாததால் வறட்சியின் பிடியில் நெல்லை மாவட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை ஆகிய 2 பருவ மழையுமே இந்த ஆண்டு பெய்யவில்லை. இதனால் மக்கள் இடையே வறட்சி ஏற்படுமோ என்ற அச்சம் உண்டாகி உள்ளது.
    நெல்லை:

    ‘வார்தா’ புயல் சென்னையை புரட்டி போட்ட நிலையில் நெல்லையில் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. வற்றாத ஜீவநதி தாமிரபரணி பாயும் நெல்லையில் இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்படுமோ என்ற அச்சம் உண்டாகி உள்ளது. மாவட்டத்தில் வழக்கமாக பெய்யக்கூடிய தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை ஆகிய 2 பருவ மழையுமே இந்த ஆண்டு பெய்யவில்லை. ஆங்காங்கே லேசாக தூறியபடி கண்ணாமூச்சி காட்டிவிட்டது மழை. இதனால் விவசாயம் கடுமையாக பாதித்து உள்ளது.

    ஆற்றுப்பாசன பகுதி மட்டுமின்றி குளத்து பாசனம், கிணற்று பாசனங்களுக்கும் தண்ணீர் இல்லாமல் வற்றிப்போய் விட்டது. கடந்த ஆண்டு இதே நாளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகள் மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்தன. மாவட்டத்தில் உள்ள பிரதான பாசன அணையான பாபநாசம் அணை உச்சநீர்மட்டம் 143 அடி. கடந்த ஆண்டு இதே நாளில் இந்த அணை நீர்மட்டம் நிரம்பிய நிலையில் 141.95 அடியாக இருந்தது.

    இன்று காலை இதன் நீர்மட்டம் மிக குறைவாக 26.10 அடியாக இருக்கிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு வெறும் 40 கன அடியாகவே இருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 204 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இதேபோல 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு 150.33 அடியாக உயர்ந்திருந்தது. இன்று வெறும் 61 அடியே உள்ளது.

    118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டி 116.90 அடியாக காணப்பட்டது. இன்று 36.20 அடியே உள்ளது. இதேபோல் 85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணை, 84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராமநதி அணை, 72.10 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கருப்பாநதி அணை, 36.10 அடி உச்சநீர்மட்டம் கொண்ட குண்டாறு அணை, 132.22 அடி உச்சநீர்மட்டம் கொண்ட அடவிநயினார் அணை உள்ளிட்ட அனைத்து அணைகளுமே கடந்த ஆண்டில் இதே நாளில் நிரம்பி இருந்தன.

    ஆனால் இன்று கடனா அணை நீர்மட்டம் 49.30 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 41.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 47.75 அடியாகவும், கன மழை பெய்தாலே நிரம்பக்கூடிய குண்டாறு அணை நீர்மட்டம் 22.75 அடியாகவும், அடவிநயினார் அணை 71.50 அடியாகவும் உள்ளன. மற்ற அணைகளின் நீர்மட்டமும் குறைவாகவே உள்ளது. இதனிடையே மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கிவிட்டது. மழை இல்லாததால் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்து கொண்டே வருகிறது.

    நீர்மட்டம் குறைந்தாலும் மாவட்டத்தின் குடிநீர் தேவைக்கும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் ஆற்று நீர் வழங்கவேண்டிய கட்டாய நிலை உள்ளது. இதனால் இன்னும் ஓரிரு நாட்களிலேயே பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் ஓரிரு மாதத்திலேயே மாவட்டம் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளவேண்டிய அபாய நிலை உருவாகி உள்ளது.

    மேலும் விவசாயம் அறவே செய்யமுடியாத நிலையும் உண்டாகியிருக்கிறது. தற்போது மாவட்டத்தில் மானூர் உள்ளிட்ட சில இடங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழை பயிர்களுக்கு டிராக்டர் மூலமாக தண்ணீர் விலை கொடுத்து வாங்கி பாய்ச்சி வருகின்றனர்.


    நெல்லை மாவட்டமே வறட்சியை நோக்கி செல்லும் நிலையில் அரசு நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.
    Next Story
    ×