search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயலால் சூறையாடப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா சீரமைப்பு பணிகள் தாமதம்
    X

    புயலால் சூறையாடப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா சீரமைப்பு பணிகள் தாமதம்

    புயலால் சூறையாடப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா சீரமைப்பு பணிகள் தாமதம் ஆவதால் பொதுமக்கள் சாலைகளிலேயே நடை பயிற்சி மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகர பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் மாநகராட்சி பூங்காக்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் ஆண்களும், பெண்களும் நடைபயிற்சி செய்வார்கள். புயல் பாதிப்பால் பூங்காக்கள் சூறையாடப்பட்டன. இதனால் பூங்காக்களில் நடை பயிற்சி செல்பவர்கள் கடந்த 5 நாட்களாக சாலைகளிலேயே நடை பயிற்சி மேற்கொள்ளும் நிலை உள்ளது.

    12-ந்தேதி புயல் தாக்கிய பின்னர் தொடர்ந்து பள்ளிகளும் சரியாக இயங்காததால் குழந்தைகளும் பூங்காக்களில் விளையாட முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    பூங்காக்களில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து கிடப்பதால் அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன. பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து கிடக்கின்றன. நகரின் மற்ற பகுதிகளில் மீட்பு பணிகள் முடிந்த பின்னரே இந்த பூங்காக்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

    கிண்டி சிறுவர் பூங்காவில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. குழந்தைகளின் விளையாட்டு சாதனங்களும், பொது மக்கள் அமரும் இருக்கைகளும் நொறுங்கி கிடக்கின்றன. இங்கு சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    இன்று காலையில் கிண்டி சிறுவர் பூங்கா அதிகாரி தனசேகரன் தலைமையில் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    சிறுவர் பூங்காவில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்க்கும் போது அப்பணிகள் முடிவடைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என்றே தெரிகிறது. எப்போதும் பரபரப்பாகவும், குதூகலத்துடனும் காணப்படும் சிறுவர் பூங்கா களை இழந்து காடுபோல காட்சியளிக்கிறது. அங்குள்ள பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் லட்சக்கணக்கில் சேதம் இருக்கும் என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

    சிறுவர் பூங்காவின் நுழைவு வாயிலில் வருகிற 18-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டிருப்பதாக அறிவிப்பு பலகை தொங்க விடப்பட்டுள்ளது. அதற்குள் பணி முடிந்து பூங்கா திறக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் விடுமுறை நீட்டிக்கப்படுவதற்கே வாய்ப்பு இருப்பதாகவும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×