என் மலர்

  செய்திகள்

  சாய்ந்த மின்கோபுரங்களை படகில் சென்று சீரமைக்கும் பணி தீவிரம்
  X

  சாய்ந்த மின்கோபுரங்களை படகில் சென்று சீரமைக்கும் பணி தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாய்ந்த மின்கோபுரங்களை படகில் சென்று சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.
  சென்னை:

  வார்தா புயல் காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள மின்கோபுரங்கள் சாய்ந்ததில் மின்பாதைகள் சேதமடைந்து, மின்சார வினியோகம் தடைபட்டது. மின்உற்பத்தி நிலையங்களில் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், அதனை தேவைப்படும் இடத்திற்கு கொண்டு செல்வதற்கு போதிய மின்பாதைகள் இல்லாததால், மின்சார வினியோகம் முறையாக நடக்கவில்லை.

  குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகள், கடந்த 4 நாட்களாக மின்சார வினியோகம் இல்லாமல் இருளில் மூழ்கி கிடக்கின்றன.

  இதனால் வீடுகளில் ஆழ்குழாய் கிணறு மற்றும் கிணறுகளில் இருந்து மின்சார மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்க முடியாத அவலநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். குறிப்பாக வேலைகளுக்கு கூட செல்ல முடியாமல் குடிதண்ணீர் பெற குடங்களுடன் வெகுதொலைவில் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். அத்துடன் அத்தியாவசிய தேவைக்கு மின்சாரம் இல்லாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து முற்றிலுமாக முடங்கி உள்ளது.

  எனவே விரைவாக மின்சாரம் வினியோகம் செய்ய போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ள மின்ஊழியர்களுடன் இணைந்து தமிழ்நாடு மின்சார வாரியம் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது.

  இதுகுறித்து மின்சார வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

  புறநகர் பகுதிகளில் உள்ள மின்கோபுரங்கள் சாய்ந்த இடங்களில் இடுப்பளவிற்கு மேலே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அதுகளிமண்ணும், சகதியும் நிறைந்த பகுதியாக இருப்பதால் நடந்து சென்று சீரமைக்கும் பணியை செய்ய முடியவில்லை.

  அதேநேரம் அப்பகுதியில் அதிகளவு தேங்கி கிடக்கும் மழைநீரையும் உடனடியாக அப்புறப்படுத்த முடியவில்லை.

  எனவே படகுகளை வாடகைக்கு எடுத்து அவற்றில் சென்று 24 பல்முனை உயரழுத்த மின்கோபுரங்கள் மற்றும் உயரழுத்த மின்கம்பிகளை சீரமைப்பதற்காக, உயிரையும் துச்சமாக கருதி, சவாலான பணியில் மின்ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின்சார வினியோகம் செய்வதில் சற்று காலதாமதம் ஏற்படுகிறது.

  குறிப்பாக சோழிங்கநல்லூர், அத்திப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது மாநகர பகுதிகளில் 90 சதவீதமும், புறநகர் பகுதிகளில் 30 முதல் 40 சதவீதமும் மின்வினியோகம் அளிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் ஓரிரு நாட்களில் புறநகர் பகுதிகளில் முழுமையாக மின்சார வினியோகம் செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

  இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

  மின்கம்பங்கள் மூலம் (மேல்வழி) மின்சார இணைப்பு உள்ள பகுதிகளில், குறிப்பாக புழல் ஜி.என்.டி.சாலை, போரூர் குன்றத்தூர் நெடுஞ்சாலை, அம்பத்தூர் உள்பட இடங்களில் சரிந்து விழுந்த மின்கம்பங்களும், டிரான்ஸ்பார்ம்களும் அகற்றப்படாமல் அப்படியே இருக்கின்றன.

  மின்சார வாரிய ஊழியர்களும் வந்து பார்க்கவில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கமாக இருக்கிறது. இதனால் எப்போது மின்சாரம் வினியோகம் சீரடையும் என்று தெரியாமல் மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  தொடரும் மின்தடையால் ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறித்து சிலர் கூறியதாவது:-

  4 நாட்களாக இருளில் இருப்பதால் வாழ்க்கையே இருளில் மூழ்கிப்போனது போல் இருக்கிறது. தண்ணீர் மோட்டார், பிரிட்ஜ்(குளிர்சாதன பெட்டி), வாஷிங் மெஷின்(சலவை எந்திரம்), மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய மின்சாதனங்கள் ஓய்வில் இருப்பதால், எங்களுக்கு ஓய்வு கிடைக்கவில்லை.

  தண்ணீருக்காக தெருத்தெருவாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. அடிபம்புகளில் தவம் இருக்க வேண்டி உள்ளது. குடிநீர் லாரி எப்போது வருமோ? என்று காத்திருக்க வேண்டி உள்ளது. செல்போன்களும் சார்ஜ் இல்லாமல் தற்போது வெறும் காட்சி பொருளாக உள்ளது. இதனால் நண்பர்கள், உறவினர்களை தொடர்புகொள்ள முடியாமல் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

  மரங்கள் அனைத்தையும் வார்தா புயல் வாரி சுருட்டியதால், இரவில் காற்று இல்லாமல் புழுக்கமாக உள்ளது. அசதியில் கண்கள் லேசாக அசந்தாலும், கொசுக்கள் விடுவதில்லை.

  இதனால் கொசுக்களை விரட்டுவதிலேயே பாதி இரவுப்பொழுது போய் விடுகிறது. பின்னர் காலையில் எழுந்து தண்ணீர் பிடிக்க வேண்டும். ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வரிசையில் நிற்க வேண்டும் என்பன போன்ற வேலைகளை நினைத்து மீதி தூக்கமும் கலைந்து போய் விடுகிறது.

  இதனால் பலர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே தமிழக அரசும், மின்சார வாரியமும் போர்க்கால அடிப்படையில் மின்சார வினியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

  மின்சாரம் வினியோகம் எப்போது சீரடையும் என்ற கேள்விக்கு விடை கிடைக்காவிட்டாலும், 2 நாட்களில் வந்து விடும் 3 நாட்களில் வந்து விடும் என்று மக்கள் தங்களை தாங்களே சமாதானம் செய்துக்கொள்வதை பார்க்க முடிகிறது. தொடர் மின்தடையை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில இடங்களில் மக்கள் சாலைமறியல் போராட்டத்திலும் குதிக்கிறார்கள்.

  ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட 32, 33 மற்றும் 34-வது வார்டு பகுதிகளில் மின்வினியோகம் செய்யப்படவில்லை. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று சி.டி.எச். சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமரசம் செய்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

  இதேபோல் பட்டாபிராம் அம்பேத்கர் நகரில் வீடுகள் மீது விழுந்த மரங்கள் அகற்றப்படாததை கண்டித்து பி.ஓ.டி. சாலையில் பாதிக்கப்பட்டவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. பட்டாபிராம் கருணாகரசேரி மற்றும் தேவர் தெரு பகுதியிலும் மின்வினியோகம் வழங்கக்கோரி மறியலில் ஈடுபட முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
  Next Story
  ×