search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் மின்வெட்டு எதிரொலி: ஜெனரேட்டர் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 ஆயிரம்
    X

    தொடர் மின்வெட்டு எதிரொலி: ஜெனரேட்டர் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 ஆயிரம்

    ‘வார்தா’ புயல் காரணமாக மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் மக்கள் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
    சென்னை:

    ‘வார்தா’ புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் மக்கள் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்த தொடங்கி உள்ளனர். ஜெனரேட்டர் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.

    ‘வார்தா’ புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் புறநகர் பகுதிகளில் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை. சரிந்து விழுந்த மரங்களும், மின்கம்பங்களும் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே கிடக்கின்றன.

    இதனால் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாக மின் வினியோகம் இன்றி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் வீடுகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நிலத்தடி நீரை ஏற்ற முடியவில்லை.

    இதனால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் சிலர் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீரை ஏற்றிவருகின்றனர்.

    இதன்காரணமாக ஜெனரேட்டர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது. இது போன்ற அவசர காலங்களில் ஜெனரேட்டர்களுக்கு வாடகையாக ரூ.800 முதல் ரூ.1,000 வரை வசூலிப்பது வழக்கம்.

    ஆனால் தற்போதைய தொடர் மின்வெட்டின் காரணமாக தேவை அதிகரித்து இருப்பதால் ஜெனரேட்டர்களின் வாடகையை இரு மடங்காக உயர்த்தி இருக்கின்றனர்.

    அதன்படி தற்போது ஜெனரேட்டர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,000 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இதனால் புறநகர் பகுதியில் வசித்து வரும் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
    Next Story
    ×