என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கையில் பரவலாக சாரல் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை
    X

    சிவகங்கையில் பரவலாக சாரல் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

    சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. விருதுநகர், ராமநாதபுரத்தில் மேகமூட்டம் காணப்படுகிறது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. விருதுநகர், ராமநாதபுரத்தில் மேகமூட்டம் காணப்படுகிறது.

    தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான நடா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இன்று காலை நடா புயல் காரைக்கால் அருகே கரையை கடந்தது.

    புயல் சின்னம் காரணமாக நேற்று முதல் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, மானாமதுரை திருப்பத்தூர், திருப்புவனம் ஆகிய பகுதிகளில் பெய்த சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சிவகங்கை 24, மானா மதுரை 21, இளையான்குடி 17.4, திருப்புவனம் 34.6, திருப்பத்தூர் 20, தேவ கோட்டை 17.3, காரைக்குடி 16.

    கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு மழை பெய்தது. ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    விருதுநகர் மாவட்டத்திலும் சில இடங்களில் அவ்வப்போது தூறல் மழை பெய்தது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் உள்ளிட்ட இடங்களில் மேகமூட்டம் காணப்படுகிறது.

    மதுரையில் நேற்று காலை தொடங்கிய சாரல் மழை இரவு வரை பெய்தது. இதனால் நகரில் பல் வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. இன்று காலையும் சில இடங்களில் சாரல் மழை இருந்தது.

    மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
    Next Story
    ×