என் மலர்
செய்திகள்

அறந்தாங்கி அருகே விவசாயிகள் சாலை மறியல்
அறந்தாங்கி:
அறந்தாங்கியை அடுத்த ரெத்தினக்கோட்டையில் அறந்தாங்கி வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு பிரதமர் பயிர்காப்பீடு செய்யும் முகாம் நடை பெற்றது. இதில் 500 விவசாயிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்களின் விபரங்களை வேளாண்துறை அலுவலர்கள் பெற்றனர்.
பின்னர் விவசாயிகள் செலுத்தும் பயிர் காப்பீட்டிற்கான பிரிமியத்தைப் பெற காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் வரவில்லை. காப்பீட்டு நிறுவன அலுவலர்களுக்காக விவசாயிகள் பலமணி நேரம் காத்திருந்தனர். இருப்பினும் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் யாரும் வராததால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தாசில்தார் பரணி, வேளாண்மை உதவி இயக்குனர் சக்திவேல், சப்- இன்ஸ்பெக்டர் கோபி நாத் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டனர்.






