search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆளில்லா கட்சி என்று விமர்சனம்: திருநாவுக்கரசர் மீது தமிழிசை பாய்ச்சல்
    X

    ஆளில்லா கட்சி என்று விமர்சனம்: திருநாவுக்கரசர் மீது தமிழிசை பாய்ச்சல்

    ஆளில்லாத கட்சி என்று விமர்சனம் செய்த திருநாவுக்கரசர் இதற்கு முன் எம்.பி.யாவும் - மத்திய மந்திரியாகவும் இந்த கட்சியினர் ஆக்கியது என்பதை மறக்கலாமா? என்று தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இரண்டு பெரிய திராவிட கட்சிகளை நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில் எதிர்த்து போட்டியிட்டு 3-வது இடத்தை பா.ஜனதா பிடித்து உள்ளது.

    முதல்வர் கனவு காணும் பல கட்சிகளை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. அப்படிப்பட்ட பா.ஜனதா கட்சி தமிழகத்தில் இல்லை. அந்த கட்சிக்கு ஆளும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சகோதரர் திருநாவுக்கரசர் பேசியிருப்பது ஆச்சரியமாக உள்ளது.

    அந்த ஆள் இல்லாத கட்சியில் இதற்கு முன் ஏன் சேர்ந்தார் என்று எண்ணி பார்க்க வேண்டும். இந்த கட்சியினர் அவரை எம்.பி. ஆக்கி மத்திய மந்திரியாகவும் ஆக்கியது என்பதை மறக்கலாமா?

    இப்போது காங்கிரசின் மாநில தலைவர் பதவி கிடைத்ததற்காக நன்றி உணர்ச்சியை இப்படியா காட்டுவது.

    எங்கள் கட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். 3 சதவீத வாக்கு வாங்கி வைத்துள்ளோம். ஆனால் உங்கள் கட்சியின் நிலை என்ன?

    மாவட்ட தலைவர்களாவது உங்களுடன் இருக்கிறார்களா? என்பதை பார்த்துக் கெகள்ளுங்கள். நாங்கள் மண்டல நிர்வாகிகள் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம். எங்கள் கட்சி அமைப்பு முறை பற்றி அவருக்கு நன்றாக தெரியும்.

    ஆனால் உங்கள் கட்சியின் நிலை என்ன? உண்மையிலேயே தைரியம் இருந்தால் வருகிற உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று எங்களுடன் மோதட்டும். அப்போது தெரியும் எந்த கட்சி ஆள் இருக்கும் கட்சி, ஆள் இல்லாத கட்சி எது என்று.

    இருக்கும் ஆட்களையே இழந்து வரும் காங்கிரஸ், எழுச்சி பெற்றுவரும் பா.ஜனதாவை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை. சொத்துக்கள் வாங்கி இருப்பதாக கூறி இருக்கிறார். எங்களுக்கு ஆட்கள் இருக்கிறது.

    கட்சியை வளர்ப்பதற்காக நிதி திரட்டி ஒருசில மாவட்டங்களில் கட்சி அலுவலகத்திற்கு இடம் வாங்கி இருக்கிறார்கள். அதை எந்த தளத்திலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆனால் சகோதரர் திருநாவுக்கரசர் இப்போது இருக்கிற இடம் காமராஜர் சேர்த்து வைத்த இடம். அந்த இடத்தை கூட நிர்வகிப்பதற்கு தமிழக காங்கிரசில் ஆள் இல்லை என்று டெல்லி தலைவர்கள் கையில் எடுத்து உள்ளார்கள்.

    இந்த லட்சணத்தில் இருக்கும் காங்கிரஸ், பாரதிய ஜனதாவை விமர்சிக்க தகுதி இருக்கிறதா? என்பதை யோசித்து பார்த்து விமர்சிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×