search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே புதையலுக்காக தாய் - மகளை நரபலி கொடுக்க முயன்ற பூசாரி
    X

    தேனி அருகே புதையலுக்காக தாய் - மகளை நரபலி கொடுக்க முயன்ற பூசாரி

    தேனி அருகே புதையலுக்காக தாய்-மகளை நரபலி கொடுக்க முயன்ற பூசாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.
    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் பூசாரி முருகன். (வயது 40). இவர் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் பெரியபாண்டி, அவரது மனைவி லெட்சுமி (30), மகள் வினோதினி (11) ஆகியோரது ஜாதகத்தை கடந்த சில தினங்களுக்கு முன் பார்த்துள்ளார். அப்போது அவர்களை தனியாக வைத்து பூஜை நடத்தினால் புதையல் கிடைக்கும் என்று நம்பினார்.

    இது பற்றி அவர் உறவினர்களான பெரிய முனியாண்டி, சின்ன முனியாண்டி ஆகியோரிடம் தெரிவித்தார். லெட்சுமியையும் அவரது மகள் வினோதினியையும் எப்படியாவது தனியாக அழைத்து வாருங்கள். புதையலில் உங்களுக்கும் ஒரு பங்கு தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறினார்.

    இதையடுத்து இருவரும் லட்சுமியிடம் சென்று ‘நமது குல தெய்வம் தெரியவில்லை. அதை கண்டுபிடிக்க வேண்டுமானால் உன்னையும், உனது மகளையும் தனியாக வைத்து பூஜை நடத்த வேண்டும். அவ்வாறு செய்தால் நமது குடும்பத்தில் செல்வ செழிப்பு ஏற்படும்’ என்று கூறினர்.

    இதனை நம்பிய லட்சுமி தனது மகளை அழைத்துக் கொண்டு இரவு நேரத்தில் அவர்கள் குறிப்பிட்டபடி ஊருக்கு அருகே உள்ள தோப்புப் பகுதிக்கு வந்தார். அங்கு பூசாரி முருகன் பூஜை பொருட்களுடன் தயார் நிலையில் இருந்தார். பெரிய முனியாண்டியும், சின்ன முனியாண்டியும் பூஜைக்காக குழிகளை தோண்டினர்.

    அந்த சமயத்தில் அப்பகுதியில் வந்த நாராயணன் (70) என்பவர் சத்தம் கேட்டு உற்றுப் பார்த்தார். ஆட்களையும் பூஜைப் பொருட்களையும் பார்த்த அவர் நரபலி கொடுக்கப் போகிறார்கள் என சத்தம் போட்டார். இதையடுத்து கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். அதற்குள் பூசாரி முருகன் தப்பி ஓடிவிட்டார். பெரிய முனியாண்டியையும், சின்ன முனியாண்டியையும் பிடித்த பொதுமக்கள் தேவதானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரித்தனர்.

    அப்போது புதையலுக்காக அவர்கள் நரபலி பூஜை நடத்த ஏற்பாடு செய்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய பூசாரி முருகனை தேடி வருகிறார்கள். உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் தாயும் மகளும் நரபலியில் இருந்து தப்பினர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×