என் மலர்
செய்திகள்

ராஜராஜசோழனின் தங்க சிலையை மீட்க கோரி பொது நல வழக்கு: ஐகோர்ட்டில் தள்ளுபடி
சென்னை:
தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் முன்னாள் அமைச்சர் சுவாமி நாதன். இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அதில், ‘சோழநாட்டை ஆண்ட ராஜராஜ சோழன், 9-ம் நூற்றாண்டில் தஞ்சாவூரில் மிகப்பெரிய சிவன் கோவில் ஒன்றை கட்டினார். பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அந்த கோவிலில், ராஜராஜ சோழன், அவரது மனைவி ஆகியோரது உருவம் பொறிக்கப்பட்ட தங்க சிலைகள் இருந்தது.
இந்த தங்க சிலைகள் பல நூற்றாண்டுகளுக்கு பழமை வாய்ந்தது. இந்த சிலை, 1990ம் ஆண்டு பெரிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தபோது இருந்தது. அதன்பின்னர், விலை மதிக்க முடியாத அந்த சிலைகள் கோவிலில் இருந்து மாயமாகி விட்டது.
தற்போது, இந்த சிலை குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியத்தில் உள்ளது என்று தெரியவந்துள்ளது. எனவே, இந்த பழமையான தங்கச்சிலையை மீட்டுக் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘பழங்காலத்து விலை மதிக்க முடியாத சிலைகள் வெளிமாநிலத்தில் இருந்தால், அவற்றை மீட்டுக் கொண்டு வருவது தமிழக அரசின் கடமை.
மனுதாரர் தமிழக அரசை மீண்டும் அணுகி இந்த கோரிக்கையை முன்வைக்க வேண்டும். எனவே, இந்த வழக்கை பொதுநல வழக்காக கருத முடியாது. அதனால், வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.