என் மலர்
செய்திகள்

வீராணம் ஏரியில் மூழ்கிய விழுப்புரம் மாணவரை தேடும் பணி தீவிரம்
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
ஏரி இந்த ஆண்டு தூர்வாரப்பட்டுள்ளதால் ஏரிக்கு குறைந்த அளவு தண்ணீர் வந்தாலும் அதன் வேகம் அதிகமாக உள்ளது.ஏரியில் குளிக்க செல்வோர் ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கி பலியாகும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
விழுப்புரம் பெரியார் நகரை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் விக்னேஷ் (வயது 18). விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தனது நண்பர்களுடன் நேற்று காட்டுமன்னார் கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.
பின்னர் வீராணம் ஏரியின் முகப்பு பகுதிக்கு விக்னேசும், அவரது நண்பர்கள் 2 பேரும் சென்றனர். அவர்கள் வீராணம் ஏரியில் குதித்து ஆனந்தமாக குளித்தனர்.
திடீரென்று அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். ஏரியின் அருகே நின்று கொண்டிருந்த லால்பேட்டையை சேர்ந்த இளைஞர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரில் 2 பேரை மீட்டனர். விக்னேசை மீட்க முடிய வில்லை. அவர் தண்ணீரில் மூழ்கினார்.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள், மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் நேற்று காலையில் இருந்து வீராணம் ஏரியில் விக்னேசை தேடினார்கள். பலன் இல்லை.
இதையடுத்து நேற்று மாலை முதல் 4 படகுகள் மூலம் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று தேடினார்கள். மாணவன் விக்னேஷ் இதுவரை கிடைக்கவில்லை.
இன்று காலையும் தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.