search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடிக்கு திடீர் ஆதரவு: வைகோ, பா.ஜனதா அணிக்கு தாவுகிறார்
    X

    மோடிக்கு திடீர் ஆதரவு: வைகோ, பா.ஜனதா அணிக்கு தாவுகிறார்

    கருப்பு பணத்தை ஒழிப்பதில் பிரதமர் மோடிக்கு திடீரென வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் அவர் பா.ஜனதா பக்கம் தாவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று அரசியல் வட்டராங்கள் தெரிவித்தன.
    சென்னை:

    மத்திய அரசு கருப்பு பணத்தை ஒழிக்க ரூ.500,ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததையடுத்து நாடுமுழுவதும் பணத் தட்டுப்பாடால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இதனால் மத்திய அரசை கண்டித்து நாளை நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன.

    தமிழகத்திலும் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பிரதான கட்சிகள் அனைத்துமே நாடு தழுவிய இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

    மக்கள் நல கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் இந்த கூட்டணியின் முக்கிய தலைவரான வைகோ இந்த போராட்டத்தை ஆதரிக்கவில்லை.

    பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது-

    500, 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் போராட்டங்கள் நடைபெறுகின்றன. நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுகிறது. வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் நீண்டவரிசையில் நிற்கிறார்கள் என்றெல்லாம் பரபரப்பை கிளப்புகிறார்கள்.

    ம.தி.மு.க.வை பொறுத்த அளவில் இந்த வி‌ஷயத்தில் அழுத்தமான கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் எடுத்த இந்த நடவடிக்கையை ம.தி.மு.க. தொடர்ந்து ஆதரிக்கும்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

    வைகோவின் இந்த மனமாற்றம் கூட்டணியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

    விடுதலைப்புலிகளை ஒழித்த விசயத்தில் காங்கிரசுக்கு பெரும் பங்கு உண்டு என்று வைகோ கடுமையாக விமர்சித்து வருகிறார். தி.மு.க. மீதான ஊழல் புகார்கள் பற்றியும் விமர்சிக்க தவறுவதில்லை. அந்த அணி மக்களால் வெறுக்கப்படும் அணி என்று பகிரங்கமாக கூறி வரும் வைகோ, பா.ஜனதா பக்கம் தாவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்கள் சிரமப்பட்டாலும் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவே அதிகமாக உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. வைகோவுக்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உண்டு.

    தனது ஆவேச பேச்சால் இளைஞர்களை கவர்ந்து இருக்கிறார். இதனால் பா.ஜனதா பக்கம் செல்வதே பலம் என்ற முடிவுக்கு வைகோ வந்து விட்டதாகவே கூறப்படுகிறது.

    ஏற்கனவே பா.ஜனதா கூட்டணியில் வைகோவும் அங்கம் வகித்தவர்தான். எனவே அவரை வரவேற்பதில் பா.ஜனதாவுக்கு எந்தவித தயக்கமும் இருக்காது.

    ஏற்கனவே மக்கள் நல கூட்டணியில் கருத்து வேறுபாடு பகிரங்கமாகவே வெளிவந்துவிட்டது.

    காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. ஏற்பாடு செய்த அனைத்து கட்சி கூட்டத்தை மக்கள் நல கூட்டணி தலைவர்கள் புறக்கணித்தார்கள். ஆனால் திருமாவளவன் வெளிப்படையாகவே ஆதரித்தார். ஆனால் கூட்டணி காரணமாக கலந்து கொள்ள இயலவில்லை என்று மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

    நெல்லித்தோப்பு தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்தார். இந்திரா நூற்றாண்டு விழாவில் பங்கேற்று ராகுல் பிரதமர் ஆவார். காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்று கூறினார். காங்கிரஸ் ஆட்சி தான் இப்போதைய சூழலில் தேவையானது என்று பேசி வருகிறார்.

    இதன் மூலம் திருமா காங்கிரஸ் பக்கம் திரும்பிவிட்டார் என்றே தெரிகிறது. அடுத்து வரும் தேர்தலில் மக்கள் நல கூட்டணி இருக்கப் போவதில்லை. கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் தஞ்சம் அடைந்துவிடும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

    இந்த சூழ்நிலையில் தான் வைகோவும் தனது பாதையை வகுக்க தொடங்கி இருக்கிறார்.
    Next Story
    ×