search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வணிகர் சங்கங்கள் சார்பில் 28-ந்தேதி கடை அடைப்பு: வெள்ளையன் அறிவிப்பு
    X

    வணிகர் சங்கங்கள் சார்பில் 28-ந்தேதி கடை அடைப்பு: வெள்ளையன் அறிவிப்பு

    ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக வணிகர் சங்கங்கள் சார்பில் 28-ந்தேதி கடை அடைப்பு செய்வோம் என்று வெள்ளையன் அறிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கூட்டம் புரசைவாக்கம் பி.டி.ஆர். திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கே.தேவராஜ், மூத்த துணை தலைவர் டி.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநில இணை செயலாளர்கள் சி.எப். செல்வம், வில்லிவாக்கம் லெனின், மாவட்டத் தலைவர்கள் ப.தேவராஜ், காஞ்சி வி.ஏ. கருணாநிதி, மாவட்ட செயலாளர்கள் துரைமாணிக்கம், பரமசிவம், புரசை குமார், கொளத்தூர் சந்தானம், அண்ணாநகர் கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதது குறித்தும் சில்லரை வணிகர்கள் பாதிக்கப்படுவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசை கண்டிக்கும் விதத்தில் நாளை மறுநாள் (28-ந்தேதி) தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறியதாவது:-

    ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு சாமானிய மக்கள் கைகளில் பண நடமாட்டம் இருக்கக் கூடாது, சில்லரை வணிகர்களின் கடைகளில் வியாபாரம் நடக்கக் கூடாது என்கின்ற உள் நோக்கம் கொண்டது. “கரன்சி வேண்டாம் ரொக்கப் பணம் வேண்டாம். கார்டு மூலம் வாங்கிக் கொள்ளுங்கள்” என்பது ஆன்லைன் வணிகத்தை நோக்கி மக்களைத் திருப்பும் மோசடித் திட்டம்.

    இறுதித் தாக்குதலாக ஆன்லைன் வணிகம் களம் இறக்கப்பட்டிருக்கின்றது. ஆன்லைன் வணிகத்தை நோக்கி ஒட்டு மொத்த மக்களையும் திருப்புவதற்காக செய்யப்பட்ட தந்திரம்

    வணிகர் சங்க பேரவை சார்பில் 18.11.2016 அன்று தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம். வணிகர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை.

    உள்நாட்டு சில்லரை வணிகத்தை அழிக்கச் செய்யப்பட்டிருக்கும் இந்த மோசடியை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சிகள் போராட்டங்கள் அறிவித்து உள்ளன. இந்த போராட்டங்களுக்கு வணிகர்களின் ஆதரவை தெரிவிக்கும் விதத்தில் நாளை மறுநாள் 28.11.2016 திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்பு செய்வது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முடிவெடுத்திருக்கின்றது. சில்லரை வணிகம் காக்க, சுய தொழில்களைக்காக்க, அந்நிய ஆபத்தில் இருந்து சுதந்திரத்தைக் காக்க உறுதி ஏற்கும் வகையில் தமிழகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் இந்த கடையடைப்பில் பங்கேற்பார்கள்.

    இவ்வாறு த.வெள்ளையன் கூறினார்.

    Next Story
    ×