search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்டு அம்பத்தூரைச் சேர்ந்தவர்
    X

    துப்பாக்கி சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்டு அம்பத்தூரைச் சேர்ந்தவர்

    துப்பாக்கி சண்டையில் பெண் மாவோயிஸ்டு உள்பட 3 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெண் மாவோயிஸ்ட் அம்பத்தூரைச் சேர்ந்தவர் என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சில மாநிலங்களில் வலுவாககாலூன்றி இருக்கிறார்கள். குறிப்பாக மேற்கு வங்காளம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.

    இவர்களை தடுக்க மத்திய அரசு மாநில போலீசாருடன் இணைந்து அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

    தமிழகத்தில், கேரளா மற்றும் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் அவ்வப்போது திடீர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கோவை, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் எல்லையோர போலீசார் எப்போதுமே உஷாராக இருப்பார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரள எல்லையோர தமிழக காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகள் வனச்சரக அலுவலகங்களில் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். இதன் பின்னர் கேரள போலீசாரும் தமிழக போலீசாரும் மாவோயிஸ்டுகளை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் நீலகிரி அருகே கேரள மாநில எல்லைக்குட்பட்ட நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் சிலர் பதுங்கி இருந்து சதி திட்டம் தீட்டுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மலப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவேந்திர குமார் பகரா தலைமையில் போலீசார் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

    மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காக கேரளாவில் ‘தண்டர் போல்டு’ என்கிற பெயரில் சிறப்பு படை செயல்பட்டு வருகிறது. இவர்களே மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்தனர்.

    இதை அறிந்ததும் மாவோயிஸ்டுகள் திடீரென போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதை எதிர் பாராத போலீசார் முதலில் நிலை குலைந்தனர். பின்னர் சுதாரித்துக் கொண்டு போலீசாரும் துப்பாக்கியால் சுட்டு பதிலடி நடத்தினர்.

    மாவோயிஸ்டுகளும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே 2 மணி நேரத்துக்கும் மேலாக துப்பாக்கி சண்டை நடந்தது. இதன் முடிவில் ஒரு பெண் மாவோயிஸ்டு உள்பட3 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெண் மாவோயிஸ்டின் பெயர் காவேரி என்கிற அஜிதா (45).

    இன்னொரு மாவோயிஸ்டு தீவிரவாதியின் பெயர் குப்புசாமி என்ற குப்பு தேவராஜ் (60). போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு இரையான இன்னொரு தீவிர வாதி யார்? என்பது உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.

    இவர்களின் உடலை கைப்பற்றிய தேனி போலீசார் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் வைத்தனர்.

    பெண் மாவோயிஸ்டு காவேரி சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர். பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை இவர் சென்னையிலேயே முடித்துள்ளார். அம்பத்தூரில் பள்ளி படிப்பை முடித்து சென்னையில் உள்ள பிரபலமான மகளிர் கல்லூரியிலேயே பட்டப்படிப்பை படித்துள்ளார்.

    சிறு வயதிலேயே மாவோயிஸ்ட் இயக்கங்களின் மீது பற்று கொண்ட காவேரிக்கு மற்ற பெண்களை போல இல்லற வாழ்வில் ஈடுபாடு ஏற்படவில்லை. இதனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்து விட்டார். மாவோயிஸ்டு இயக்கத்தில் இணைந்து கர்நாடக மாநில வனப் பகுதிகளில் பதுங்கி இருந்து செயல்பட தொடங்கினார்.

    இன்னொரு மாவோயிஸ்டு தீவிரவாதியான குப்புசாமி கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர். 1990-ம் ஆண்டு மதுரையில் நடந்த வங்கி வழிப்பறியில் கைது செய்யப்பட்ட குப்புசாமி, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். அதன் பின்னர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்நிலையில்தான் குப்புசாமியும் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி இருக்கிறார். மாவோயிஸ்டு இயக்கத்தில் மூத்த தலைவராக குப்புசாமி செயல்பட்டு வந்தார்.

    குப்புசாமி பல ஆண்டுகளாக போலீசில் சிக்காமலேயே இருந்ததால் அவரை பிடிக்க பல்வேறு வியூகங்களையும் போலீசார் வகுத்திருந்தனர். கேரளா, கர்நாடகா, தமிழக போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருந்த குப்புசாமியின் தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக திட்டம் தீட்டிய போதுதான் போலீசாரிடம் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்த போது, காஷ்மீர் தீவிரவாதிகளிடமும், நாட்டை சீர்குலைக்க நினைக்கும் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளிடமும் பெரும் அளவில் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக கூறி இருந்தது.

    இதனை உறுதிபடுத்தும் வகையில் தமிழக எல்லையோர பகுதிகளில் வந்து மாவோயிஸ்டுகள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு திட்டமிட்டதும், இதனை முறியடிக்கும் முயற்சியின் போது துப்பாக்கி சண்டை நடந்து அதில் மாவோயிஸ்டுகள் உயிரிழந்திருப்பதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் அதனை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் மாவோயிஸ்டுகள் தவித்துள்ளனர். இந்த பணத்தை எப்படியாவது மாற்றி விட வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்துள்ளனர்.

    எல்லையோர கிராமங்களில் வசிப்பவர்கள் மற்றும் ஆதிவாசிகள் மூலமாக தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருந்தனர். இந்த முயற்சியை போலீசார் முளையிலேயே கிள்ளி எறிந்துள்ளனர்.

    போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையின்போது 14 மாவோயிஸ்டுகள் தப்பி ஓடி விட்டனர். இவர்களை பிடிக்க இன்று 2-வது நாளாக போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

    கேரள போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டை நிலம்பூர் வனப்பகுதி, தமிழக எல்லைக்கு அருகாமையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    நீலகிரி மாவட்ட எல்லையோரத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்திலேயே 3 மாவோயிஸ்டுகளும் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது தமிழக போலீசார் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து கோவை - நீலகிரி மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×