என் மலர்
செய்திகள்

மானாமதுரை அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் தெருவைச் சேர்ந்தவர் துபாய் காந்தி (வயது55). இவர் அருகில் உள்ள கிளாங்காட்டூரில் செங்கல் சேம்பர் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வேலையை முடித்து விட்டு 7 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் துபாய் காந்தியை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது.
ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மானாமதுரைஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை மோசமானதால் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடைய துபாய் காந்தி வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீபோல பரவியதால் பதட்டம் நிலவியது. கிளாங்காட்டூரில் உள்ள கருப்பணன் என்பவரின் வீட்டில் நேற்று இரவு மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றது. இதில் அவரது வீடு சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த கருப்பணன், முருகேசுவரி மற்றொரு கருப்பணன் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொழில் அதிபருக்கு அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு என அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்களால் கிளாங்காட்டூரில் பதட்டம் நிலவுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் அசம்பாவித சம்வங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
துபாய் காந்தியை வெட்டியது யார்? தொழில் போட்டி காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை வெட்டிய கும்பலே பெட்ரோல் குண்டு வீசி சென்றதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






