search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தூரில் தாய்-தந்தை சமாதியின்மேல் படுத்து தற்கொலை செய்த லாரி டிரைவர்
    X

    மத்தூரில் தாய்-தந்தை சமாதியின்மேல் படுத்து தற்கொலை செய்த லாரி டிரைவர்

    மத்தூரில் லாரி டிரைவர் தாய், தந்தை சமாதியின் மேல் படுத்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் உள்ள கோட்டை தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 55). லாரி டிரைவர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச் சந்தை கிராமத்தில் வசித்து வரும் தனது தங்கை சுமதியின் வீட்டிற்கு சென்று கடந்த ஒரு வருடங்களாக தங்கியிருந்தார். அங்கிருந்தபடி ஆஸ்பத்திரிகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில், நேற்று வெள்ளிச்சந்தையில் இருந்து மத்தூருக்கு பஸ்சில் வந்தார். அவர் நேராக வீட்டிற்கு செல்லாமல் வீட்டின் அருகே உள்ள உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பேசி கொண்டிருந்தார்.

    பின்னர் மாலையில் ஜெயராமன் டாஸ்மாக் கடைக்கு சென்று மது ஒன்றை வாங்கினார். அதன் பிறகு அங்குள்ள ஒரு கடையில் இருந்து வி‌ஷப் பாட்டில் ஒன்றையும் வாங்கினார். இவருடைய தாய், தந்தையின் சமாதி மத்தூரை அடுத்த மூக்காகவுண்டனூர் சுடுகாட்டில் உள்ளது.

    தான் வாங்கிய அந்த மதுவையும், வி‌ஷப் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு ஜெயராமன் நேராக மூக்கா கவுண்டனூரில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று தாய், தந்தையின் சமாதியின் அருகில் அமர்ந்து, திடீரென மதுவில் வி‌ஷத்தை கலந்து குடித்தார்.

    பின்னர் தாய், தந்தை அடக்கம் செய்திருந்த சமாதியின் மேல் பகுதியில் அப்படியே படுத்து தூங்கினார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் இரவு நடந்ததால் யாருக்கும் தெரியவில்லை. இன்று அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள் ஜெயராமன் சமாதியின் மேல் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மூக்கா கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஊர் கவுண்டர் ஆதிமூலம் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து ஆறுமுகம் மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மத்தூர் போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டர் ராமாண்டவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். தற்கொலை செய்த இவருக்கு கலைவாணி என்ற மகளும், தமிழ்செல்வன் என்ற மகனும் உள்ளனர்.

    லாரி டிரைவர் தாய், தந்தை சமாதியின் மேல் படுத்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×