search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் அயுக்தா சட்டம்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
    X

    தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் அயுக்தா சட்டம்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

    தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் அயுக்தா சட்டம் கொண்டு வரவேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “ஊழலை ஒழிக்க வேண்டும் என்று எந்நேரமும் ஆர்வம் காட்டுவதாக கூறும் மத்திய அரசு லோக்பால் அமைப்பை ஏன் இன்னும் ஏற்படுத்தவில்லை” என்று பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் தாண்டவமாடும் ஊழலைக் காணும் அனைத்து ஊழல் ஒழிப்பு ஆர்வலர்கள் மத்தியிலும் உச்சநீதிமன்றத்தின் இந்தக் கேள்வி தமிழகத்தில் உள்ள அதிமுக அரசின் தலை மீதும் வைத்த குட்டு என்றே எண்ணப்படுகிறது.

    தமிழகத்தில் முதன் முதலில் “பொது வாழ்வில் ஈடுபட்டோர் இலஞ்ச ஊழல் குற்ற தடுப்புச் சட்டம்” கொண்டு வந்து 5.4.1973 அன்று தமிழக சட்டமன்றம் மற்றும் மேலவை ஆகிய இரு அவைகளிலும் நிறைவேற்றிய தலைவர் கலைஞரும் மத்தியில் லோக்பால் அமைப்பு உருவாகவும், மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்தவும் பேராதரவு தெரிவித்தார்.

    தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சரையும் விசாரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் போல், பிரதமரையும் விசாரிக்கும் வகையில் லோக்பால் சட்டம் இருக்க வேண்டும் என்றே அன்று கழகத்தின் சார்பில் தலைவர் கலைஞர் கோரிக்கை விடுத்தார் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க, “லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்டம் 2013” பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று 16.1.2014 அன்று நடைமுறைக்கு வந்துவிட்டது.

    ஆனால் அதன் பிறகு மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. தலைமையிலான அரசு இதுவரை லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை.

    இதுவரை லோக்பால் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வராமல் மத்திய அரசு தாமதிக்கிறது. அதனால்தான், “அவசரச் சட்டம் கொண்டு வந்து இந்த திருத்தங்களை நிறைவேற்றி லோக்பால் அமைப்பு ஏன் உருவாக்கக் கூடாது?” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு மத்திய அரசைப் பார்த்து நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறது.

    ஏற்கனவே கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட“பொது வாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்ற தடுப்புச் சட்டத்தை” 1977ஆம் ஆண்டு ரத்து செய்த மோசமான வரலாற்று பின்னனியைக் கொண்டுள்ள அ.தி.மு.க. அரசு தற்போதும் லோக் அயுக்தா அமைப்பை மாநிலத்தில் ஏற்படுத்த தயக்கம் காட்டுகிறது.

    லோக்பால் சட்டத்தில் உள்ள பிரிவு 63ன்படி அதிமுக அரசு 365 நாட்களுக்குள் லோக்அயுக்தா அமைப்பை தமிழகத்தில் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் 34 மாதங்களாக “லோக் அயுக்தா” அமைக்கும் கோப்பை கிடப்பில் போட்டு வைத்துள்ளது அதிமுக அரசு.

    இந்த அமைப்பை உருவாக்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையிலும் கூட வழக்கமான “வாய்தா வாங்கும்” செயலில்தான் அதிமுக அரசு தீவிரம் காட்டுகிறதே தவிர, ஊழல் ஒழிப்பில் எந்த ஆர்வமும் காட்டவில்லை.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எப்படி “லோக்பால் அமைப்பு” தேவையோ, அதே மாதிரி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு “லோக் அயுக்தா” அமைப்பு இன்றியமையாதது.

    பொது வாழ்வில் தூய்மையை நிலைநாட்டவும், அப்பழுக்கற்ற அரசு நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்கவும் உச்சநீதிமன்றத்தின் இந்த கண்டனத்திற்குப் பிறகாவது “லோக்பால்” அமைப்பை உடனடியாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    லோக்பால் வி‌ஷயத்தில் மத்திய அரசுக்குத் தானே உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது என்று அலட்சியமாக இருக்காமல், தமிழகத்தில் “லோக் அயுக்தா” அமைப்பை உடனடியாக அ.தி.மு.க. அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட் டுக்களை பெறுவதற்கு அளிக்கப்பட்ட சலுகைகள் இன்றுடன் முடிவதால், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த சலுகைகளை 31.3.2017 அன்று வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
    Next Story
    ×