search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய 500 ரூபாய் நோட்டுகளை பெற்ற பெண்கள் மகிழ்ச்சியுடன் அதை காண்பித்தபோது எடுத்த படம்
    X
    புதிய 500 ரூபாய் நோட்டுகளை பெற்ற பெண்கள் மகிழ்ச்சியுடன் அதை காண்பித்தபோது எடுத்த படம்

    சேலம் வங்கிகளில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வினியோகம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

    சேலத்தில் உள்ள வங்கி களில் நேற்று புதிய 500 ரூபாய் நோட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன. அதை பெற்ற பொதுமக்கள், சில்லரை தட்டுப்பாடு நீங்கும் என மகிழ்ச்சி தெரிவித்தனர்.
    சேலம்:

    கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 2 வாரங்கள் கடந்த பிறகும் பொதுமக்கள் தங்களது அன்றாட செலவுகளுக்கு தேவையான பணத்துக்காக வங்கிகள், ஏ.டி.எம். மையங்களின் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி வருகின்றனர். அதே சமயம், வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,000 மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. புதிய ரூ.2,000 நோட்டுகள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்கள் மூலமாக கிடைத்தாலும், அதை மாற்ற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதை காணமுடிகிறது.

    இந்த நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியில் இருந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள வங்கிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

    சேலத்தில் உள்ள வங்கிகளில் நேற்று முதல் புதிய ரூ.500 நோட்டுகள் வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கியது. புதிய ரூ.500 நோட்டுகளை வாங்கி சென்ற பொதுமக்கள், இனிமேல் சில்லரை தட்டுப்பாடு இருக்காது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    சேலம் 4 ரோட்டில் ஒரு வங்கி மற்றும் முதல் அக்ரஹாரத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நேற்று வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ.500 நோட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன. பணத்தை பெற்றுக்கொண்ட பொதுமக்கள், ‘இதுதான் புதிய ரூ.500 நோட்டா’ என்று வியப்புடன் பார்த்தனர்.

    சேலம் பகுதியில் உள்ள சில ஏ.டி.எம். மையங்களிலும் புதிய ரூ.500 நோட்டுகளை பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். அப்போது பொதுமக்களில் சிலர் புதிய 500 ரூபாயை பார்ப்பதற்கு வெளிநாட்டு ரூபாய் போல உள்ளது என்று தெரிவித்தனர். பின்னர், வீடுகளுக்கு சென்று புதிய ரூபாய் நோட்டுகளை தங்களது குடும்பத்தினரிடம் காண்பித்தனர். மேலும் சிலர் புதிய 500 ரூபாய் நோட்டுடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். ஒரு சிலர் புதிய 500 ரூபாய் நோட்டை படம் பிடித்து ‘வாட்ஸ் அப்பில்’ அனுப்பி நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 2 வாரத்திற்கு மேலாக சில்லரை தட்டுப்பாட்டால் கடுமையாக அவதிப்பட்டு வந்தோம். வங்கிகளில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிடைத்தாலும் அதை மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வந்தோம். மளிகை கடைகளில் கொடுத்து பொருட்கள் வாங்க முடியவில்லை. ஆனால், புதிய ரூ.500 நோட்டுகள் தற்போது புழக்கத்தில் வந்துள்ளதால் இனிமேல் சில்லரை தட்டுப்பாடு நீங்கிவிடும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
    Next Story
    ×