search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிறந்தநாள் அன்று சிறைக்கு போன மதன்
    X

    பிறந்தநாள் அன்று சிறைக்கு போன மதன்

    தனது 45-வது பிறந்தநாள் அன்று மதன் சிறைக்கு சென்றதாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளது.
    சென்னை:

    தனது 45-வது பிறந்தநாள் அன்று மதன் சிறைக்கு சென்றதாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளது.

    பட அதிபர் மதனின் தலைமறைவு வாழ்க்கை பற்றி தினமும் ருசிகரமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று அதிகாலையில் திருப்பூரில் உள்ள அவரது தோழி வர்ஷா வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
    ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்தே சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், உதவி கமிஷனர் நந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் மில்லர், சந்திரசேகர், ஆல்வின் ராஜ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் வர்ஷா வீட்டை மாறுவேடத்தில் கண்காணித்தப்படி இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு வர்ஷா திடீரென்று காரில் வெளியே புறப்பட்டு சென்றார். தனிப்படை போலீசாரும் இன்னொரு காரில் பின் தொடர்ந்து சென்றனர்.

    வர்ஷா திருப்பூர் கடைவீதிக்கு சென்று கேக், ஐஸ்கீரிம் மற்றும் ஏராளமான இனிப்பு வகைகளை வாங்கினார். ஒரு பூச்செண்டு ஒன்றையும் வாங்கி வந்தார். வீட்டுக்கு வந்தவுடன் போலீசார் அதிரடியாக வர்ஷாவின் வீட்டுக்குள் நுழைந்தனர்.

    வீட்டின் மேல்மாடியிலும், தரைதளத்திலும் போலீசார் சோதனை போட்டபோது, மதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சோர்ந்து போன போலீசார் வெளியே வந்துவிட்டனர். அடுத்து அதிகாலையில் மீண்டும் வர்ஷாவின் வீட்டுக்குள் சென்று சோதனை போட்டனர். தூங்கிக்கொண்டிருந்த வர்ஷா, அவருடைய மகன்கள், தாயார் ஆகியோரை வீட்டின் கீழ் தளத்தில் வைத்து விசாரித்தனர். மதன் அங்கு இல்லை என்று வர்ஷா தொடர்ந்து சாதித்தபடி இருந்தார். திடீரென்று வர்ஷா கையில் வைத்திருந்த செல்போனை வாங்கி போலீசார் ஆய்வு செய்தனர்.

    செல்போனில் மதனோடு வர்ஷா எடுத்துக்கொண்ட விதவிதமான புகைப்படங்கள் காணப்பட்டன. அந்த புகைப்படங்களை காட்டி இந்த படங்கள் எப்போது எடுத்தது என்று வர்ஷாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி போட்டனர்.

    போலீசாரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வர்ஷா திணறினார். செல்போனில் மதனுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட படங்கள் வர்ஷாவை போலீசாரிடம் சிக்க வைத்துவிட்டன. வர்ஷா வேறுவழி இல்லாமல் மேல் மாடியில் மதன் தங்கி இருப்பதை ஒப்புக்கொண்டார். உடனே போலீஸ் அதிகாரிகள் மேல் மாடிக்கு சென்றனர்.

    தரை தளத்தில் போலீசார் விசாரித்தபோது, மதன் கழிவறைக்குள் இருந்துள்ளார். போலீசார் வந்ததை தெரிந்துகொண்டதும் அவசரமாக வர்ஷாவின் பாவாடையை லுங்கி போல் கட்டிக்கொண்டு ரகசிய அறைக்குள் சென்று பதுங்கி உள்ளார்.

    மதன் ரகசிய அறையில் இருப்பதை வர்ஷா போலீசாருக்கு காட்டிக்கொடுத்துவிட்டார். அதன்பிறகு தான் போலீசார் மதனை ரகசிய அறையில் வைத்து கைது செய்தனர்.

    கேக் மற்றும் ஐஸ்கீரிம், பூச்செண்டு போன்றவற்றை ஏன்? வாங்கினீர்கள் என்று வர்ஷாவிடம் போலீசார் விசாரித்தனர். மதனுக்கு திங்கட்கிழமை 45-வது பிறந்தநாள் என்றும், பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்காக கேக் வாங்கியதாகவும், மதனுக்கு வாழ்த்து சொல்வதற்காக பூச்செண்டு வாங்கியதாகவும் வர்ஷா போலீசாரிடம் கூறினார்.

    மதன் தனது 45-வது பிறந்தநாளில் போலீசார் கையில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    6 மாத காலம் தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு தனது பிறந்தநாளில் மதன் சிறைக்கு சென்றுள்ளார். மதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு நேற்று அனுமதி வழங்கி உள்ளது.

    மதனை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேற்று இரவில் விசாரணை நடத்தினார். மோசடி செய்த பணத்தை எந்தெந்த வகையில் செலவழித்தார். எங்கெங்கு சொத்துகள் வாங்கி உள்ளார் என்பது பற்றிய விவரங்களை மதனிடம் நேற்று இரவு விசாரித்தனர்.
    Next Story
    ×