என் மலர்
செய்திகள்

காட்பாடியில் பள்ளி மாணவர்கள் மோதல்
வேலூர்:
காட்பாடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று காலை இடைவேளை விடப்பட்டது.
அப்போது பிளஸ்-1 மாணவர்களும், பிளஸ்-2 மாணவர்களும் ஒருவருக்கொருவர் கேலியும் கிண்டலும் செய்தனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது.
அக்ராவரம் பகுதியை சேர்ந்த மாணவர்களாகவும், வண்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்த மாணவர்களாகவும் இரு பிரிவுகளாக பிரிந்து பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
பள்ளி வளாகத்தில் நடந்த இந்த மோதலால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்த மோதல் தொடர்பாக அந்தந்த பகுதி மாணவர்கள் தங்கள் ஊரை சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அக்ராவரத்தை சேர்ந்த ஏஜாஸ் அகமது உள்பட சிலரும், வண்டறாந்தாங்கலை சேர்ந்த சரா என்கிற சரவணன் (39) உள்பட சிலரும் பள்ளிக்கு வந்தனர்.
அவர்களுக்கு இடையே மாணவர்கள் மோதல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலானது. தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஏஜாஸ் அகமதுவின் முகத்தில் சரவணன் வெட்டினார்.
ஏஜாஸ் அகமது மீது சரமாரி தாக்குதலும் நடந்தது. பின்னர் சரவணனும், அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். தாக்குதலில் ஏஜாஸ் அகமது காயம் அடைந்தார்.
சிகிச்சைக்காக அவர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த மோதல் காரணமாக காட்பாடியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்புக்காக பள்ளி முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
மோதல் காரணமாக பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. எனவே பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் இருந்து புறப்பட்டு தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.
இந்த மோதல் தொடர்பாக 2 மாணவர்களை போலீசார் பிடித்தனர். அவர்களை விசாரணைக்காக காட்பாடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த மாணவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.