என் மலர்
செய்திகள்

ஒட்டன்சத்திரம் நகரில் அனைத்து ஏ.டி.எம்.களும் மூடியதால் மக்கள் தவிப்பு
ஒட்டன்சத்திரம்:
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளதால் அனைத்து பொதுமக்களும் தங்களிடம் உள்ள நோட்டுகளை மாற்ற வங்கி நோக்கி படையெடுத்து வருகின்றனர். வங்கியில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க தங்கள் கணக்கில் உள்ள பணத்தையாவது எடுக்கலாம் என்றால் பெரும்பாலான ஏ.டி.எம்.க்கள் செயல்படாத நிலையிலேயே உள்ளது.
ஒரு சில ஏ.டி.எம்.க்களில் பணம் நிரப்பிய உடனே தீர்ந்து விடுவதால் மக்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் நகரில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே அனைத்து ஏ.டி.எம்.களும் பூட்டியே கிடக்கிறது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வங்கியிலேயே காத்திருந்து பணத்தை பெற்றுச் செல்கின்றனர். அந்த பணத்தை எடுக்கவும் நீண்ட நேரம் காத்திருந்து குறிப்பிட்ட அளவு மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று நிபந்தனை விதிப்பதால் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. இங்குள்ள மார்க்கெட்டிற்கு வெளியூர் வியாபாரிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். அவர்கள் தங்கள் தேவைக்காக சிறிய தொகை பணம்கூட எடுக்க முடியவில்லை.
விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு உரம், பூச்சி மருந்து, விதை போன்றவைகூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாங்க மறுப்பதால் நகைகளை அடகு வைத்து கூட பணம் எடுக்க முடியவில்லை. இதனால் கூட்டுறவு வங்கிகளும் மூடப்பட்டு உள்ளன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் செயல்படும் நியாயவிலை கடைகளிலும் பழைய ரூபாய் நோட்டுகள் வாங்க அனுமதி இல்லாததால் ரேசன் பொருட்களை கூட மக்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே குறைந்தபட்சம் ஏ.டி.எம். மையங்களையாவது செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.