என் மலர்
செய்திகள்

கணவர் 2-வது திருமணம் செய்ததால் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
பேரையூர்:
மதுரை அழகப்பன்நகர் அருகில் உள்ள முத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது33). இவருக்கு செல்வராஜம் (24) என்ற மனைவியும், ஸ்ரீமதி (7), ஸ்ரீநிதி (3) என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஜெயபால் தேவி என்ற ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் செல்வராஜடம் கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் திருமங்கலம் மேலக்கோட்டையில் உள்ள தனது அண்ணன் செல்வ திருமுருகன் வீட்டிற்கு வந்துவிட்டார்.
சம்பவத்தன்று ஜெயபால் மேலக்கோட்டை சென்று தனது மனைவியிடம் சமரசம் பேசி வீட்டிற்கு அழைத்தார். அதன்படி செல்வராஜத்திடம், 2 குழந்தைகளை முத்துபட்டிக்கு செல்லுமாறும், தான் சிறிது நேரத்தில் வந்து விடுவதாகவும் கூறிவிட்டு ஜெயபால் சென்றார். ஆனால் செல்வராஜம், 2 குழந்தைகளுடன் கணவர் வீட்டுக்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜத்தை தேடி வருகின்றனர்.