என் மலர்
செய்திகள்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கருப்பு திராட்சை விலை வீழ்ச்சி
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல்,வாழை,தென்னை, விவசாயத்திற்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் அதிக அளவு நடைபெற்று வருகிறது.
குறிப்பாக காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பில் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டிலே ஆண்டு தோறும் முழுவதும் திராட்சைபழம் கிடைக்கும் இடமாக கம்பம் பள்ளதாக்கு பகுதி விளங்குகிறது. இங்கு விளையும் திராட்சைகள் கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரமானமதுரை,கோவை,திருச்சி, உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பபடுகிறது.
இங்கு விளையும் கருப்பு பன்னீர் விதை உள்ள திராட்சை இயற்கையிலே மருத்துவகுணம் உடையது என்பதால் கம்பம் பள்ளதாக்கு திராட்சைக்கு கேரளாவில் பொதுமக்கள் இடையே அதிக வரவேற்பு இருக்கிறது.
தற்போது இந்த பகுதியில் வடக்கு கிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் திராட்சை தோட்டங்களில் அருவடைக்கு தயாராக இருக்கும் பழங்களில் வெடிப்பு ஏற்பட்டு விடும்என்ற அச்சத்தில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்.
இதனை வியாபாரிகள் பயன்படுத்தி கொண்டு ஒரு கிலோ திராட்சை ரூ. 20 முதல் 22 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். இதனால் திராட்சை விவசாயத்திற்கு செலவு செய்ய பணத்தை கூட எடுக்க முடியவில்லை என்று விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.