என் மலர்

  செய்திகள்

  ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் வராததால் வங்கிகளில் டெபாசிட் மட்டுமே ஏற்பு
  X

  ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் வராததால் வங்கிகளில் டெபாசிட் மட்டுமே ஏற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் வராததால் சென்னையில் இன்று பெரும்பாலான வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி மட்டுமே நடந்தது.
  சென்னை:

  ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு அந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.

  அதன்படி கடந்த 10-ந் தேதி முதல் நாடெங்கும் பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்று பழைய ரூ.500, ரூ.1000 கொடுத்து புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மற்றும் ரூ.100 நோட்டுகளை பெற்று வருகிறார்கள்.

  முதலில் சில தினங்களுக்கு ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக ரூ.4000 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. பிறகு அந்த உச்சவரம்புத் தொகை ரூ.4500 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் கூட்டம் அலைமோதியது.

  இதற்கிடையே ஏ.டி.எம்.களில் ரூ.2 ஆயிரம் வரை எடுக்கலாம் என்ற விதி தளர்த்தப்பட்டு ரூ.2500 வரை எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நாடெங்கும் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில் ஏ.டி.எம்.கள் செயல்படவில்லை. பெரும்பாலான ஏ.டி.எம்.கள் முடங்கிக் கிடக்கின்றன.

  இந்த நிலையில் ஒரே நபர் மீண்டும், மீண்டும் வங்கிகளுக்கு வந்து பணம் எடுப்பதைத் தவிர்ப்பதற்காக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களின் கை விரலில் அழியாத அடையாள “மை” வைக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்குள் 90 சதவீத வங்கிகளுக்கு அழியாத மை வராததால் கடும் குழப்பமும் பிரச்சினையும் ஏற்பட்டது.

  நேற்று முதல் சில வங்கிகளில் மை வைக்க தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களின் எண் ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது.

  இந்த நிலையில் மத்திய அரசு நேற்று பொது மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கொடுத்து ரூ.2 ஆயிரம் மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்று கூறியது. ரூ.4500 கிடைத்தால் ஓரளவு சமாளித்து விடலாம் என்று நினைத்து கொண்டிருந்தவர்களிடம் இது மிகுந்த அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

  சரி.... மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று மனதை ஆறுதல்படுத்திக் கொண்டவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் ஒரு பலத்த அடி விழுந்துள்ளது. அதாவது அந்த 2 ஆயிரம் ரூபாயையும் வங்கிகளில் பெற முடியாத திண்டாட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. எப்படி ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் முடங்கிப் போனதோ, அதே மாதிரி வங்கிகளும் போதுமான பணம் இல்லாமல் முடங்கிப் போகத் தொடங்கி உள்ளன.

  ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும் ரிசர்வ் வங்கி மூலம் நாடெங்கும் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கொடுக்கப்பட்டன. அதோடு ரூ.50, ரூ.100 நோட்டுகளும் பொதுமக்களுக்கு வங்கிகளில் கிடைத்தது. ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.2 ஆயிரம் நோட்டுகளும், ரூ.100 நோட்டு கட்டுகளும் வர, வர பல்வேறு வங்கிகளின் கிளைகளும் அவற்றைப் பெற்று மக்களுக்கு கொடுத்தன.

  10-ந்தேதி முதல் 14-ந் தேதி வரை முதல் 5 நாட்களுக்கு மட்டுமே ரூபாய் நோட்டுகள் மாற்றம் சுமூகமாக நடந்தது. கடந்த மூன்று நாட்களாக அதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகளின் கிளைகளுக்கு தேவைக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகளை அனுப்புவதில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  ரிசர்வ் வங்கி பணம் தராததால் வங்கிகள், தங்களை நாடிவரும் வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் ரூபாய் நோட்டுகளை கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு வங்கி கிளையும் தினமும் காலை தங்களுக்கு வரும் பணத்தை சிலருக்கு மட்டுமே கொடுக்க முடிந்தது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேரிட்டது.

  நேற்று முன்தினம் ஏற்பட தொடங்கிய பணத் தட்டுப்பாடு முதலில் சில வங்கிகளில் எதிரொலித்தது. நேற்று சுமார் 50 சதவீத வங்கி கிளைகளில் பணத் தட்டுப்பாடு காணப்பட்டது. தங்களிடம் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூட பணம் கொடுக்க முடியாமல் திணறினார்கள்.

  இந்த நிலையில் இன்று வங்கிகளில் பணத் தட்டுப்பாடு மேலும் அதிகரித்தது. அதாவது இன்று ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகளுக்கு 10-ல் 1 பங்கு என்ற அளவுக்கே பணம் கொடுக்கப்பட்டது.

  உதாரணத்துக்கு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் தினமும் ரூ.1 கோடி அளவுக்கு ரூபாய் நோட்டுகள் புழக்கம் நடைபெறும். அந்த வங்கி கிளைக்கு நேற்றும் இன்றும் காலையில் ரூ. 8 லட்சமும், மாலையில் ரூ. 5 லட்சமும் மட்டுமே கொடுத்தனர்.

  ரூ.1 கோடி புழங்கும் இடத்தில் வெறும் 13 லட்சம் ரூபாயை பயன்படுத்த கொடுத்ததால் அந்த வங்கியின் அதிகாரிகளும், ஊழியர்களும் மிகவும் திணறினார்கள். முதலில் வந்த சிலருக்கு மட்டுமே அவர் களால் பணம் கொடுக்க முடிந்தது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

  சென்னையில் உள்ள அத்தனை வங்கி கிளைகளிலும் இன்று இதே நிலை தான் காணப்பட்டது.

  சென்னையில் வங்கி கிளைகளுக்கு போதுமான பணம் கிடைக்காததால் இன்று ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகளை மாற்றும் நடவடிக்கை முழுமையாக அடியோடு முடங்கியது. சில வங்கிகளில் பெயருக்கு சிலருக்கு பணத்தை மாற்றி கொடுத்து விட்டு நிறுத்தி விட்டனர்.

  சில வங்கிகளில் “அழியாத மை” வரவில்லை. எனவே இன்று ரூபாய் நோட்டுகள் மாற்ற முடியாது என்று அறிவித்தனர். சில வங்கிகளில் “பணம் கை இருப்பு இல்லை” என்று எழுதி வங்கி வாசலில் நோட்டீஸ் ஒட்டி இருந்தன.

  சென்னையில் உள்ள 90 சதவீத வங்கிகளில் இன்று பணம் மாற்றம் நடக்கவில்லை.

  ஏ.டி.எம்.கள் முடங்கி போய் கிடப்பதால் பொதுமக்களில் பலர் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். வங்கியிலும் பணம் இல்லை, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்ற பரிதாப நிலை மக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

  சென்னை போன்று கோவை உள்ளிட்ட பல ஊர்களிலும் இதே நிலை காணப்பட்டது. ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மக்களை நிலை குலையச் செய்துள்ளது.

  ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு எப்போது சீராகும் என்று உறுதியாக யாருக்கும் தெரியவில்லை. தட்டுப்பாடு அதிகரிக்கும்பட்சத்தில் ரூபாய் நோட்டுகளைத் தேடி மக்கள் அலைய வேண்டியதிருக்குமோ என்ற அச்சம் மக்கள் மனதில் ஏற்பட தொடங்கி உள்ளது.

  “போதுமான பணம் கை இருப்பில் உள்ளது” என்று மத்திய மந்திரிகளும், ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் தினம்,தினம் கூறி வருகிறார்கள். பிறகு ஏன் ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கி கிளைகளுக்கு போதுமான அளவுக்கு ரூபாய் நோட்டுகள் வந்து சேரவில்லை என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

  இந்த நிலையில் ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்க வங்கி கிளைகள் டெபாசிட் செய்யப்படுவதை ஊக்கப்படுத்தி வருகின்றன. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யுங்கள் என்று தகவல்கள் பரப்பப்பட்டன.

  சென்னையில் இன்று பெரும்பாலான வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி மட்டுமே நடந்தது.

  பெரும்பாலான வங்கிகளில் தங்களிடம் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்தன. தங்களிடம் கணக்கு வைத்திருப்பவர்களை மட்டும் உள்ளே அழைத்து பணம் கொடுத்தனர்.

  அதுவும் வாடிக்கையாளர்கள் கேட்ட தொகை கொடுக்கப்படவில்லை. ரூ.10 ஆயிரம் கேட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரமே வழங்கப்பட்டது.

  மடிப்பாக்கத்தில் உள்ள ஓரியண்டல் வங்கி “பணம் மாற்ற முடியாது” என்று எழுதி அறிவிப்பை ஒட்டி இருந்தது. மடிப்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கிக் கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு மட்டும் பணம் கொடுக்கப்பட்டது.

  ஒவ்வொரு வங்கியும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். ரிசர்வ் வங்கியில் இருந்து சரளமாக ரூபாய் நோட்டுகள் பட்டுவாடா செய்யப்பட்டால்தான் வங்கி கிளைகள் தற்போதைய சிக்கலுக்கு தீர்வு காண முடியும் என்று வங்கி கிளை அதிகாரிகள் கூறினார்கள்.

  ரிசர்வ் வங்கி ரூ.500 நோட்டுகளை புழக்கத்துக்கு விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று நிறைய பேர் கருதுகிறார்கள். ஆனால் ரூ.500 புதிய நோட்டுகள் எப்போது புழக்கத்துக்கு வரும் என்பது தொடர்ந்து மர்மம் நீடிப்பது போல நீடிக்கிறது.

  நாளையும் ரிசர்வ் வங்கி போதுமான பணத்தை வங்கி கிளைகளுக்கு கொடுக்காவிட்டால் மக்கள் மேலும் அவதியை அனுபவிக்க நேரிடும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
  Next Story
  ×