என் மலர்
செய்திகள்

பணி நிரந்தரம் செய்ய கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் முன்பு மீண்டும் போராட்டம்
பொன்னேரி:
மீஞ்சூர் அத்திப்பட்டில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை உள்ளது.
இங்கிருந்து காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்கு ராட்சத டேங்கர் லாரியின் மூலம் சமையல் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஆயில் நிறுவனத்தில் 53 பேர் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 15-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீஸ் துணை சூப்பிரண்டு கண்ணன் வந்து தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று நுங்கம்பாக்கத்தில் தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து பேச்சு வார்த்தை நடந்தது. அது தோல்வியில் முடிந்தது.
இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று மீண்டும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முன்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 3-வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நடப்பதால் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சமையல் எரிவாயு செல்ல வில்லை.
இதனால் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.