search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது புழக்கத்துக்கு வரும்?: ரிசர்வ் வங்கிக்கு ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி
    X

    புதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது புழக்கத்துக்கு வரும்?: ரிசர்வ் வங்கிக்கு ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி

    புதிய 500 ரூபாய் நோட்டுகள் தாரளமாக புழக்கத்துக்கு வந்துவிட்டால், தற்போது நிலவும் எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடும். அதனால் புதிய 500 ரூபாய் நோட்டு தமிழகத்துக்கு எப்போது வரும்? என்று ரிசர்வ் வங்கிக்கு, ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் விவசாயிகள், செல்லாத ரூபாய் நோட்டுக்களை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்கள் பெற முயற்சித்தோம். ஆனால், பணம் இல்லை என்று கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறிவிட்டனர். இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை அவசர வழக்காக கடந்த 14-ந் தேதி நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்ததால் தான் அந்த வங்கிகளுக்கு அதிகப்படியான பணம் அனுப்புவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளது. தற்போது விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூ.10 கோடி வரை பணம் அனுப்பப்பட்டுள்ளது’ என்றார்.

    கூட்டுறவு வங்கிகள் சார்பில் ஆஜரான வக்கீல், ‘பணம் இல்லாததால் கூட்டுறவு வங்கிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்காலத்திற்கு முன்பாக விவசாயப் பணிகளை விவசாயிகள் தொடங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே கூட்டுறவு வங்கிகளிலும் பழைய ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து புதிய நோட்டுக்களை மாற்றிக்கொள்ளும் வசதிகளையும், சேவைகளையும் தடையின்றி செய்ய ரிசர்வ் வங்கி வழிவகை செய்யவேண்டும்’ என்றார்.

    அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ‘கூட்டுறவு வங்கிகளில் தலைவர்களாக அரசியல்வாதிகள் உள்ளனர். அந்த வங்கிகளுக்கு அதிகப்படியான புதிய ரூபாய் நோட்டுக்களை அனுப்பி வைத்தால், கருப்புப் பணம் எளிதாக மாறுவதற்கு வாய்ப்பாகிவிடும்” என்றார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.கிருபாகரன், ‘500 ரூபாய் புதிய நோட்டு தாராளமாக புழக்கத்தில் வந்துவிட்டால், தற்போது நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்பட்டு விடும்’ என்று கருத்து தெரிவித்தார்.

    பின்னர், ‘500 ரூபாய் புதிய நோட்டு தமிழகத்தில் எப்போது புழக்கத்திற்கு வரும்? அதேப்போல அனைத்து கூட்டுறவு வங்கிளுக்கு எப்போது புதிய ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்படும்? என்பது குறித்து ரிசர்வ் வங்கி 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பதிலளிக்கவேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×