என் மலர்
செய்திகள்

கருப்பு பண ஒழிப்பால் மோடிக்கு இளைஞர்கள்- பொதுமக்களிடம் ஆதரவு: வானதி சீனிவாசன் பேட்டி
கோவை:
பாரதீய ஜனதா மாநில பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி அறிவித்துள்ள கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஏழை, எளிய நடுத்தர மக்கள், இளைஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சற்று சிரமங்கள் இருந்தாலும், அதை பொறுத்துக் கொள்ளக் கூடிய மனநிலையில் பொதுமக்கள் இருக்கிறார்கள்.
பிரதமருக்கு பெருகக்கூடிய ஆதரவை பொறுத்தக் கொள்ள முடியாத அரசியல் கட்சிகள் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள் என்கிறார்கள். கருப்பு பணத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுத்தால் குறை கூறுகிறார்கள்.
எனவே அரசியல் கட்சியினர் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை குறித்து பொதுமக்களிடம் தவறான கருத்துக்கள் மற்றும் பீதியை, பயத்தை கிளப்ப வேண்டாம்.
பிரதமர் மோடியின் நடவடிக்கையை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. அடுத்தமாதம் 31-ந் தேதி அரசு கணக்கில் இருக்கும் பணம் மற்றும் நாட்டு மக்களிடம் இருக்கும் பணம் எவ்வளவு என்பது மிகத் தெளிவாக தெரிந்து விடும். கணக்கில் காட்டப்படாத கருப்புபணம் முற்றிலும் ஒழிந்துவிடும். வரும் ஆங்கில புத்தாண்டு நமது நாட்டின் கனவை நனவாக்கும் ஆண்டாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கோவை தெப்பக்குளம் மைதானம் அருகே நடந்த உக்கடம் மண்டல பாரதீய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். வருகிற 20-ந் தேதி மக்கள் சேவை மையம் சார்பில் நடைபெற உள்ள பயிற்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை நிர்வாகிகளிடம் அவர் வழங்கினார்.
கூட்டத்திற்கு மண்டல தலைவர் பத்ரி தலைமை தாங்கினார். வர்த்தக அணி மாவட்ட தலைவர் கண்மணி பாபு வரவேற்று பேசினார்.
நெசவாளர் அணி வெங்க டேஷ் பிரசாத், மகளிரணி ஜெயலட்சுமி, பாக்கியலட்சுமி, செய்தி தொடர்பாளர் சபரிகிரீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.